×

மாற்றம் என்பது சொல் அல்ல செயல்!

தீபாவளி போன்ற பண்டிகை வந்தாலே, ஒன்று வாங்கினால் ஒன்று இலவச அறிவிப்பை பார்த்ததும் உணவுப் பாக்கெட்டுகளை ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி குவித்துவிடுவோம்.
தீபாவளிப் பண்டிகையில் நமது பாட்டியும் அம்மாவும் உரல், திருக்கை பயன்படுத்தி மாவை இடித்தும், திரித்தும் முறுக்கு, அதிரசம், மா லட்டு போன்ற பலகாரங்களைத் தயாரித்தனர். அதில் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும். கிரைண்டர், மிக்ஸி என மின் சாதனத்திற்கு மாறிய பிறகு உரலும், திருக்கையும் காணாமல் போனது. இன்று பெரும்பாலும் பாக்கெட் உணவுப் பொருட்களே நம் இல்லங்களை ஆக்கிரமித்திருக்கிறது.

‘‘ஒரு காலத்தில் வீட்டுக்குத் தேவையான அரிசி, கோதுமை, மிளகாய், மல்லி, மஞ்சள் போன்றவற்றை நாமே வாங்கி, சுத்தம் செய்து, காயவைத்து, வீட்டுக்கு அருகில் இருக்கும் மாவு அரவை மில்லுக்கு எடுத்துச் சென்று, அரைத்து பயன்படுத்திய நிலை இன்று காணாமல் போய்விட்டது. நமது அம்மாக்களின் தன்னலமற்ற அந்த உழைப்பில் மொத்த குடும்பத்தின் ஆரோக்கியம் காக்கப்பட்டது. ஆனால் இன்று நகர வாழ்க்கையின் ஓட்டத்தில், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும் பாக்கெட் மாவுகளை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம்.

குறிப்பாக முறுக்கு மாவு, அதிரச மாவு, லட்டு மாவு, இடியாப்ப மாவு, புட்டு மாவு, கொழுக்கட்டை மாவு, பஜ்ஜி, போண்டா மாவு என உணவுப் பதார்த்தங்களைத் தயாரிக்கும் மாவுகள் பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வர ஆரம்பித்ததும், மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று வாங்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. இது வேலையை சுலபமாக்குகிறது என்பதைத் தாண்டி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறதா என்றால், பதில் நம்மிடம் இல்லைதான்.

உணவு என்பது ஆரோக்கியத்திற்கானது. நமது உணவுக் கலாச்சாரம் மெதுமெதுவாக மாற்றம் அடைந்து இன்று ஜங்ஃபுட்ஸ், பாஸ்ட் ஃபுட்ஸ், பாக்கெட் ஃபுட்ஸ், ரெடி டூ குக் ஃபுட்ஸ் என விதவிதமான வடிவங்களில் ஜெட் வேகத்தில் மாற்றம் கண்டிருக்கிறது. பாக்கெட் உணவுகள் பயன்பாட்டுக்கு சுலபம் என்றாலும், ஆரோக்கியத்தில் நாம் இழந்தவை பல. பாக்கெட் உணவுகளில் மறைமுகமாய் இணைக்கப்பட்டுள்ள கலப்படங்களால் நமது ஆரோக்கியத்தை நாம் தொலைத்து வருகிறோம்.

பெரும் நிறுவனங்கள், உணவுப் பொருட்களை புராடெக்டாக தங்களின் பிராண்டாக மாற்றி, பேக்கேஜ் வடிவங்களில் மீண்டும் நமது வீடுகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கும்போது, அவற்றில் உணவை பதப்படுத்தும் பிரிசெர்வேட்டிவ்ஸ், கலரிங், பல்வேறு ரசாயனங்கள், மணம் ஊட்டிகள் கலக்கப்படுகிறது.

நீங்கள் ஸ்டாக் செய்கிற உங்களின் உணவு பாக்கெட்கள், பலநாட்களுக்கு முன்பே கலப்படத்துடன் அடைக்கப்பட்டுள்ளது. தயாரான நாளில் இருந்து எத்தனை நாட்கள் தள்ளி அந்த உணவை பயன்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கும் ஊட்டச்சத்து இழப்புதான் (nutrition loss). அத்துடன் நமது உடலுக்குள் தேவையில்லாத கலப்படங்களையும் உள்ளே அனுப்புகிறோம்.

என் தாத்தா 92 வயது வரை எந்த உடல் உபாதையும் இன்றி ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்தார். என் தந்தையின் ஆரோக்கியம் 65 வயதில் கேள்விக்குறியாய் இருக்கிறது. என் அப்பாவோடு என்னைப் பொருத்திப் பார்த்தால், 40 வயதை நெருங்கும் நான், பார்டர் லைன் நீரிழிவு நோயாளி. நமது ஆரோக்கியத்தை எங்கே தொலைத்தோம் என்கிற கேள்வி எங்கள் முன் எழுந்தது.

சத்தான உணவுகளை நாம் எடுப்பதில்லை என்பதைத் தாண்டி, தவறான உணவுப் பொருட்களை நமது வீடுகளுக்குள் கொண்டு செல்கிறோம் என மண்டைக்குள் மணி அடித்தது. கலப்படப் பொருட்களை ஒழித்துவிட்டாலே, ஆரோக்கியம் காக்கப்படும் என்பதை உணர்ந்தே, பொறியியல் சார்ந்த துறையில் பணியாற்றி வந்த நானும் என் நண்பனுமாக இணைந்து, பல கட்ட ஆராய்ச்சி, பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொடங்கியதே இந்த ஃப்ரெஷ் மில்லர்ஸ் நிறுவனம்.

நமது தேவைதான் சிலநேரம் நமக்கான தொழிலாக மாறும். கொஞ்சம் மாற்றி யோசித்தாலே வெற்றிதான்’’ என்கின்றனர் நண்பர்களான வேம்புராஜனும், வசந்த பிரியனும். நண்பர்கள் இணைந்து 2018ல் நங்கநல்லூரில் எங்களுடைய முதல் அவுட்லெட்டை தொடங்கினோம்’’ என்ற வேம்புராஜனிடம் பேசியதில்…

‘‘கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஃப்ரெஷ் மில்லர்ஸ் என்கிற பெயரில் உணவு தானியங்களையும், மசாலாப் பொருட்களையும், வாடிக்கையாளரின் தேவைக்கு, அவர்களின் கண் முன்பாகவே ஃப்ரெஷ்ஷாக அரைத்து தரும் நிறுவனத்தை சென்னையில் இயக்கி வருகிறோம்.உணவுக்காக மாவாக, ரவையாக என்னவெல்லாம் நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ அத்தனையும் எங்களிடம் ஸ்டாக் செய்யப்படாமல், அப்போதைக்கு அப்போது கிடைக்கும். இதற்காகவே நாங்கள் தானியங்களை ஐந்தந்து கிலோவாக அரைப்பதால்,
வாடிக்கையாளர்கள் எப்போது வந்தாலும் ஃப்ரெஷ்ஷாகவே கிடைக்கும்.

எங்க வீட்டு மசாலாவிற்கு இவ்வளவு மிளகாய் வேண்டும். இவ்வளவு மல்லி வேண்டும். சீரகம் இவ்வளவு, வெந்தயம் இவ்வளவு, அரிசி இவ்வளவு என சுவைக்கு ஏற்ற அளவில், அது குண்டு மிளகாயோ, நீட்டு மிளகாயோ தேர்ந்தெடுத்து, அளவுகளைச் சொல்லிவிட்டு, சில நிமிடம் காத்திருந்தால் போதும். நீங்கள் கேட்ட மசாலாப் பொடி கலப்படம் இல்லாமல், கலரிங் இணைக்காமல், ஃப்ரெஷ்ஷாய் அரைக்கப்பட்டு உங்கள் கைகளில் அதுவும் அழகான பேப்பர் கவரில் பேக் செய்யப்பட்டு கிடைக்கும். 50 கிராம் மஞ்சள் தூளைக்கூட ஃப்ரெஷ்ஷாக உங்கள் கண்முன் அரைத்து வாங்கிச் செல்லலாம்.

50 கிராம், 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ, 2 கிலோ அளவுகளிலும் தானியங்களை அரைத்துத் தருகிறோம். கோதுமையில் கொண்டைக்
கடலை சேர்த்து அரைக்கவும். அல்லது மில்லட்ஸ் இணைத்து அரைத்துத் தரவும் என்றால் அதையும் அரைத்துத் தருவோம்.அதேபோல் அரிசி மாவு, இடியாப்ப மாவு, புட்டு மாவு, சத்து மாவு என எது தேவையோ அதை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு லைவ்வாக அரைத்துப் பெறலாம். எந்த உணவாக இருந்தாலும், அது 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அரைத்து பேக்காகி வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்களின் இலக்கு.

மஞ்சள் பொடியில் தொடங்கி, சாம்பார் பொடி, ரசப்பொடி, பருப்பு பொடி, இட்லிப் பொடி என அனைத்துப் பொடிகளும், அரிசி மாவு, கோதுமை மாவு, நவதானிய மாவுகளைத்
தனித்தனியாகவும் அரைத்தும் வாங்கலாம். அதேபோல் மில்லட்டில் பொங்கல் மிக்ஸ், உப்புமா மிக்ஸ் எனத் தயாரிக்கிறோம். இது தவிர்த்து ராகி தோசை, கம்பு தோசை, வரகு தோசை, சாமை தோசை, குதிரை வாலி தோசை, ரவா தோசை, அடை தோசை, நவதானிய தோசை, சோள தோசை என 7 முதல் 8 வெரைட்டி தோசை மாவுகளை உளுந்து, வெந்தயம் இணைத்து ட்ரையாக அரைத்து பவுடராக்கித் தருகிறோம். இதில் தேவையான உப்பு, தண்ணீர் இணைத்து கரைத்து அரைமணி நேரத்தில் தோசையாக ஊற்றி சாப்பிடலாம். தேவையான மில்லட்டை தேர்ந்தெடுத்து அப்போதே அரைத்து அப்படியே வாங்கிச் செல்லலாம்.

இடியாப்ப மாவு, வெண்பொங்கல் மிக்ஸ், மில்லட் பொங்கல், உளுந்த களி மாவு, சிவப்பு அரிசி மாவு, சம்பா ரவை, சம்பா கோதுமை, கொழுக்கட்டை மாவுகளை வறுத்து அரைத்து தருகிறோம்.
சத்து மாவு தானியங்கள் 44 விதங்களில் எங்களிடம் உள்ளது. இதில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு, தேவைப்படும் அளவில் தேவையானதை மட்டும் அரைத்துப் பெறலாம். ஹெல்த் டிரிங்காக ராகி மால்ட், கொள்ளு பார்லி கஞ்சி, உளுந்த கஞ்சி மிக்ஸ், சுக்கு மல்லி காஃபி, நட்ஸ் பவுடர் மிக்ஸ்களும் உண்டு.6 மாதக் குழந்தையில் தொடங்கி, 8 மாதம், 9 மாதம், 10 மாதம், 1 வயது வரை பேபி கேர் உணவுப் பொருட்களையும் தயார் செய்து தருவதுடன், பச்சைப் பயறு லட்டு, சம்பா கோதுமை லட்டு, ட்ரை ஃப்ரூட்ஸ் லட்டு, கருப்பு உளுந்து லட்டு போன்றவையும் நாட்டுச் சர்க்கரையில் தயாராகிறது.

கஸ்தூரி மஞ்சள், நீட்டு மஞ்சள், பச்சைப்பயறு, கடலை மாவு, பச்சரிசி, பாதாம் சேர்த்து அரைத்த ஸ்கின் கேர் பவுடர்களும் அரைத்துத் தரப்படும். சமையலுக்கு தேவையான நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கூந்தலுக்கான தேங்காய் எண்ணெய், மூலிகை எண்ணெய்களும் கலப்படம் இல்லாமல் ஒரிஜினலாகக் கிடைக்கும்.தரமான தானியங்களை விவசாயிகளிடம் நேரடியாய் கொள்முதல் செய்து, சுத்தப்படுத்தி, காய வைத்து, எங்களின் கிளைகளுக்கு அனுப்பி வைக்கிறோம். சென்னையில் எங்களுக்கு 6 கிளைகள் இருக்கிறது. ஸ்டோர் இல்லாமல் இரண்டு யூனிட்டும் உண்டு. ஒன்றில் தானியங்களில் உள்ள கல், மண் நீக்கி சுத்தம் செய்து காய வைக்கின்ற வேலைகளும், மற்றொன்றில் தேவையான மூலப்பொருட்களை இணைத்து, வறுத்து, கிளைகளுக்கு அனுப்பும் பணிகளும் நடைபெறும்.

உணவுப் பொருட்களை பேப்பர் பவுட்சில் மட்டுமே பேக் செய்து தருவதுடன், பேக்கிங் கவர்கள் சிறிய அளவுகளில் தொடங்கி 1 கிலோ, 2 கிலோ அளவிலும் கிடைக்கும். காரணம், உணவு என வரும்போது அதிகமாக வாங்கி ஸ்டாக் செய்யாமல், தேவையானதை குறைந்த அளவில் வாடிக்கையாளர்கள் பெற்று, அடிக்கடி வாங்குவதே சிறந்த முறை’’ என்றவாறு விடைபெற்றனர் நண்பர்கள் இருவரும்.

பெண்களை தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறோம்!

‘‘உணவு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களைத் தேடி வாங்குவது, உணவு தயாரிப்பது, உணவு தயாரிப்பு சாதனங்களைப் பயன்படுத்துவது என பெரும்பாலும் வீடுகளில் பெண்கள்தான் செயல்படுவார்கள். அதுவே உணவுத் தொடர்பான தொழில் என வந்துவிட்டால், இத்துறையை பெரும்பாலும் ஆக்கிரமிப்பது ஆண்கள்தான். இதை மாற்றி 90 சதவிகிதமும் பெண்களையே ஊழியர்களாக நியமித்திருக்கிறோம். எல்லாக் கிளைகளிலும் சேர்த்து 45 பெண்கள் தற்போது எங்களிடம் வேலை செய்கிறார்கள்.

பெண்கள் தாங்களே தனித்துவத்துடன் பயன்படுத்துகிற வடிவில் அரவை மெஷின்கள் சுலபமாக இருப்பதுடன், மாவுப் பொருட்களை அரைத்து எடுக்கும் ப்ராசஸ், பெண்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவில் இலகுவாக, மிக எளிமையான ஸ்டோரேஜ் முறைகளில் செய்யப்பட்டு இருக்கும்.எங்கள் தயாரிப்பு உணவுப் பொருட்களை சில பெண்கள் வாங்கி விற்பனையும்
செய்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற ஊர்களில் 30க்கும் மேற்பட்ட பெண்களை நாங்கள் தொழில்முனைவோர்களாகவும் மாற்றியிருக்கிறோம். இந்தத் தொழிலை எடுத்து செய்ய பெண்கள் முன்வந்தால் அவர்களையும் ஊக்கப்படுத்தி தேவையான உதவிகளைச் செய்யத் தயாராகவே இருக்கிறோம்’’ என்றார் வசந்த பிரியன்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

 

The post மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! appeared first on Dinakaran.

Tags : Diwali ,
× RELATED இயற்கை 360°