பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்ததை கண்டித்து பெங்களூருவில் பாஜக சார்பில் போராட்டம் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்கு எதிராக அண்ணாமலையின் நண்பர் தேஜஸ்வி சூர்யா குரல் கொடுத்துள்ளார். தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக அரசு, தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி, கர்நாடகா பாஜக சார்பில் இன்று பெங்களூருவில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நண்பரும், பாஜக தேசிய இளைஞரணித் தலைவரும், கர்நாடக எம்பியுமான தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு தோல்வியடைந்துவிட்டது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கர்நாடகா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்றார். அதேபோல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனான பாஜக எம்எல்ஏ பி.ஒய்.விஜயேந்திர எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘காவிரி பிரச்னையை காங்கிரஸ் அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
விவசாயிகள் வீதியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மாநில அரசு தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸ் அரசின் தோல்வியடைந்த நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை’ என்றார். இவ்வாறாக காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. அதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் நண்பரான தேஜஸ்வி சூர்யாவும், தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இவர்களது ‘அரசியல் வேஷம்’ குறித்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
The post காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது எனக்கூறி தமிழ்நாட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் அண்ணாமலையின் நண்பர் தேஜஸ்வி சூர்யா: சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் appeared first on Dinakaran.