×

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஊட்டி ஓட்டல்கள்

*ஜனவரி 2ம் தேதி வரை அறைகள் ‘புக்கிங்’

ஊட்டி : புத்தாண்டை முன்னிட்டு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஊட்டியில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அனைத்து ஓட்டல்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டல்களிலும் ஜனவரி 2ம் தேதி வரை அறைகள் புக்கிங் ஆகியுள்ளது. நாள் தோறும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். குறிப்பாக, தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை காலங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தற்போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை என தொடர் விடுமுறை வந்துள்ள நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். புத்தாண்டை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டல்களிலும் இரவு நேரத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் ‘கேம்ப் பயர்’ நிகழ்ச்சிகள், சினிமா கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தயாராகி வரும் ஊட்டி நகரில் பெரும்பாலான ஓட்டல்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகியன வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ‘ஜொலிக்கின்றன’. பேக்கரி மற்றும் ஓட்டல்களிலும் புத்தாண்டு சிறப்பு கேக்குகள் விதவிதமாகவும், வண்ண மயமாகவும் தயாரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது தவிர நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் உள்ள காட்டேஜ்கள், ரெசார்ட்டுக்கள் புத்தாண்டிற்காக தயாராகி வருகின்றன.

இங்கு நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏராளமான வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் புக்கிங் செய்துள்ளனர். இதனால், பெரும்பாலான ரிசார்ட்டுக்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நேற்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை அறைகள் கிடையாது. ஆன்லைன் மூலமாகவே அனைத்து லாட்ஜ், காட்டேஜ் மற்றும் விடுதிகளில் புக்கிங் ஆகியுள்ளது. நேரடியாக ஓட்டல்களுக்கு வந்து அறைகள் கேட்கும் சுற்றுலா பயணிகளுக்கு அறைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் ரோந்து பணிகளை தற்போதே துவக்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் போர்வையில் வேறு யாரும் ஊடுருவாமல் இருக்க இரவு நேரங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்பீட் போட்டுகளில் சுற்றுலா பயணிகள் ‘உல்லாச’ சவாரி :

நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அருகே உள்ள பைக்காரா படகு இல்லத்திற்கு சென்று அங்கு படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இங்கு இயக்கப்படும் ஸ்பீட் போட்டுகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி செல்கின்றனர். தற்போது இந்த அணையில் பத்துக்கும் மேற்பட்ட ஸ்பீட் போட்டுகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக அணையில் தண்ணீர் அளவு குறைந்து காணப்பட்டதால் சவாரி செய்வதற்கு பொதுமக்கள் பல படிகள் இறங்கிச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது அணையில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

இதில், சீறிப்பாய்ந்து செல்லும் ஸ்பீடு போட்டுகளில் சுற்றுலா பயணிகள் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 2 தினங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்று அங்கு இயக்கப்படும் ஸ்பீட் போட்டுக்களில் பயணித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

The post புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஊட்டி ஓட்டல்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,New Year ,Dinakaran ,
× RELATED நகர திமுக சார்பில் இன்று பொது உறுப்பினர்கள் கூட்டம்