×

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கோயில் ஆகம விதிப்படி தேர்ச்சி பெற்றவர்கள் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம், சுகவனேஸ்வரர் சாமி கோயிலில் அர்ச்சகர்கள் நியமனத்துக்காக, விண்ணப்பங்களை வரவேற்று, கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டார். ‘இந்த அறிவிப்பு ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை’ என அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் அர்ச்சகராக நியமிக்க, பரம்பரை உரிமையை மனுதாரர் கோர முடியாது.

சுகவனேஸ்வரர் சாமி கோவில் ஆகம அடிப்படையிலானது என்பதால், அதில் குறிப்பிட்டபடியே அர்ச்சகர் நியமனமும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கோவில்களின் ஆகமம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்றால், அந்தக் கோயில்களில் அர்ச்சகர்களை அறங்காவலர் அல்லது தக்கார் நியமிக்கலாம். ஆகமத்தில் கூறியுள்ளபடி தேர்ச்சி பெற்றவர்களாக முறையான பயிற்சி, பூஜை செய்வதற்கான தகுதி பெற்றவர்களாக, அர்ச்சகர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அர்ச்சகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தேவையான அம்சங்களை பூர்த்தி செய்திருந்தால் அவர்களின் நியமனத்தில் ஜாதி அடிப்படையிலான பரம்பரைக்கு எந்த பங்கும் இல்லை.

இருப்பினும் சுகவனேஸ்வரர் சாமி கோவிலில் அர்ச்சகர்களை நியமிக்கும் வரை பூஜை காரியங்களை மனுதாரர் மேற்கொள்ளலாம். அர்ச்சகர் தேர்விலும் அவர் பங்கேற்கலாம் என உத்தரவிட்டிருந்தார். இதையே சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி கொண்ட அமர்வும் உறுதி செய்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முத்து சுப்ரமணிய குருக்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பரிதிவாலா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன்,‘‘இந்த விவகாரம் என்பது மாநில அரசின் அறங்காவலத்துறைக்கு உட்பட்டதாகும். மேலும் கோயில்களில் அர்ச்சகரை நியமிக்கும் போது பரம்பரை உரிமையை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றமே முன்னதாக உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசு தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது.

மேலும் ஆகம விதிகளின் படி தேர்ச்சி பெற்றவர்களாக, முறையான பயிற்சி, பூஜை செய்வதற்கான தகுதி பெற்றவர்கள் யாரை வேண்டுமானாலும் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், முத்து சுப்ரமணிய குருக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...