×

சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் அதிகாரிகள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. காட்டு நாயக்கன் சமூக சாதிச் சான்றிதழ் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த வெயில் செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், தான் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர். தனது கணவரும் இதே சமூகத்தை சேர்ந்தவர்.

11ம் வகுப்பு படிக்கும் எனது மகள் துர்காதேவிக்கு கல்வி மற்றும் அரசு சலுகைகளுக்காக சாதிச் சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்தோம். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லை என கூறி ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2022 செப்டம்பரில் மீண்டும் சாதிச் சான்றிதழ் கோரி அனைத்து ஆவணங்களையும் இணைத்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தோம். இருப்பினும் அக்டோபர் 7ம் தேதி அந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. ஆகவே சாதிச் சான்றிதழ் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, 1994ல் எஸ்டி பிரிவினரில் சாதிச் சான்றிதழ் தொடர்பான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதை தொடர்ந்து 2022ல் உயர்நீதிமன்றமும் அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் எஸ்டி பிரிவு சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்து சட்டம் அல்லது விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், ஜூலை மாத இறுதிக்குள் எஸ்டி பிரிவு சாதிச் சான்றிதழ் குறித்து வரையறைகள் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். மேலும் சாதிச் சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த கடையநல்லூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் அதிகாரிகள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : ICORD Branch ,Madurai ,iCort Branch ,Dinakaran ,
× RELATED அரசு மேல்நிலை பள்ளிகள்...