×

தேசப்பற்று குறித்து நீங்கள் வாய் திறக்கலாமா? பாஜ தலைவர் ஆனதும் நயினாரிடம் சாதி, மத வெறி குடிபெயர்ந்துள்ளது: அமைச்சர் மனோதங்கராஜ் காட்டம்

நாகர்கோவில்: தேசப்பற்று குறித்து நீங்கள் வாய் திறக்கலாமா? பாஜ தலைவர் ஆனதும் நயினாரிடம் சாதி, மத வெறி குடிபெயர்ந்துள்ளது என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். சிந்தூர் ஆபரேஷன் வெற்றியை கொண்டாடும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நேற்று முன்தினம் திருப்பூர் குமரன் சிலை முன்பிருந்து மாநகராட்சி வரை பாஜ சார்பில் தேசிய கொடி பேரணி நடந்தது. இதில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘நம்முடைய நாட்டில் எல்லோர்க்கும் தேச பக்தி உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதையாக பேசுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடுங்கள்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தினமும் விவாதம் நடைபெறுகிறது, சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்துகள் பரப்பப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதனை கண்டிக்க வேண்டும்’ என்று பேசி இருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நயினார் நாகேந்திரன் இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பாஜ தலைவர் ஆனதும் சாதி வெறியும், மத வெறியும் அவருள் குடிபெயர்ந்துள்ளது. இதனால் வெளிப்படையாகவே தொடர்ந்து வெறுப்பரசியல் பேசி வருகிறார். இதனால் அவருக்கான அடையாளத்தை நயினார் இழந்து விட்டார். 1500 ஆண்டுகள் இந்திய மண்ணை ஆக்கிரமித்திருந்த மனுஸ்மிருதியும், பாஜவின் மூதாதையர்களான இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் இந்து ராஷ்ட்ரா முழக்கமும் தான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம்.

பிரிட்டிஷாரிடம் ஓய்வூதியம் வாங்கிக் கொண்டு தங்கள் வயிற்று பிழைப்பை ஆற்றியவர்களின் வாரிசுகள், நாட்டுப்பற்று குறித்து பேசுவது, ‘‘சாத்தான் வேதம் ஓதும்” கதை. தேசப்பிதாவை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் வாரிசுகள் தேசப்பற்று குறித்து வாய் திறக்கலாமா? சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவின் 80 சதவீதம் மக்களை மாடுகளாகக் கூட மதிக்காமல் மனுஸ்மிருதி என்னும் கொடிய நச்சுப்பாம்பை உலாவவிட்டு, பாமர மக்களின் ரத்தத்தை உறிஞ்சி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கோழைகளின் வழியை பின்பற்றுபவர்களுக்கு திடீர் மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் வருவது – Patriotism is the last refuge for a Scoundrel (தேசபக்தி ஒரு அயோக்கியனுக்கு கடைசி புகலிடம்) என்பதை தெளிவுபடுத்துகிறது.

பிரிட்டிஷாரின் கால்பாதம் தொட்டு தவழ்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து சிறையில் இருந்து வெளிவந்த தங்களின் கொள்கை மூதாதையர்கள் வழியில் வந்தவர்கள், இப்போது அமெரிக்க அதிபரின் அடிவருடிகளாக மாறி, நாட்டின் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கி உள்ளது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தேசப்பற்று குறித்து நீங்கள் வாய் திறக்கலாமா? பாஜ தலைவர் ஆனதும் நயினாரிடம் சாதி, மத வெறி குடிபெயர்ந்துள்ளது: அமைச்சர் மனோதங்கராஜ் காட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Nainar ,Minister ,Manothangaraj Kattam ,Nagercoil ,Manothangaraj ,Sindhur Operation ,Narendra Modi ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...