×

கார் விற்பனையில் மந்தம்; நடுத்தர மக்கள் வருமானம் அதிகரிக்காமல் தேக்கம்: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய தொழில்துறை மீண்டும் ஒருமுறை அபாய சங்கை ஊதியுள்ளது. இம்முறை வாகன விற்பனைக்காக அது நடந்துள்ளது. 2018-19ல் மொத்த வாகன விற்பனையில் பயணிகள் கார்களின் பங்கு 65 சதவீதமாக இருந்த நிலையில் இப்போது 31 சதவீதமாக சரிந்துள்ளது. அதுவே விலையுயர்ந்த எஸ்யுவி மற்றும் பல்நோக்கு வாகனங்கள் விற்பனை 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அடையாளமாக கார் விற்பனை கருதப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது நடுத்தர வர்க்கத்தின் இருசக்கர வாகனத்தை விட்டு கார்களுக்கு மாற முடியாமல் தவிக்கின்றனர்.
கார் வாங்குபவர்கள் கூட பழைய கார்களை நோக்கி செல்கின்றனர்.

இதனால் வாகன உற்பத்தியாளர்கள் இப்போது உள்நாட்டு சந்தையை விட ஏற்றுமதி சந்தையில் கவனத்தை திருப்பி உள்ளனர். இது பெரும்பாலான இந்தியர்கள், நுகர்வு பொருளாதாரத்தில் இருந்து வெளியேற்றபட்டிருப்பதை காட்டுகிறது. இந்திய குடும்பங்களில் சுமார் 88 சதவீதம் பேர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறுகின்றனர். அதே சமயம் விலையுயர்ந்த கார்களின் விற்பனை அதிகரிப்பு, பொருளாதாரத்தில் நிலவும் சமத்துவமின்மை இன்னும் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. உள்நாட்டு பொருளாதாரத்தில் பலவீனமான நுகர்வு, உற்பத்தியாளர்களுக்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்கவோ, உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய திறனை உருவாக்கவோ எந்த ஊக்கமும் தராது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post கார் விற்பனையில் மந்தம்; நடுத்தர மக்கள் வருமானம் அதிகரிக்காமல் தேக்கம்: காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED மசோதாக்களின் பெயர்களை ஹிந்தியில்...