×
Saravana Stores

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்ல தமிழ்நாட்டை சேர்ந்த ‘கேப்டன் அஜித் கிருஷ்ணன்’ தேர்வு: இந்தியாவின் கனவு திட்டத்தில் தமிழரின் பங்களிப்பு

சென்னை: ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் உட்பட 4 பேர் தேர்வாகி உள்ளனர்.  இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்றோ) விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக ககன்யான் திட்டத்திற்கான சோதனைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அங்கு 3 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்புவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி இந்தியாவின் கனவு என்று இந்த திட்டம் குறித்து அறிவித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக இந்திய விமானப்படையை சேர்ந்த 12 வீரர்கள் விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், இறுதியாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்தனர். ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் யார் என்று ரகசியம் காக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபாஷ் சுக்லா ஆகிய 4 பேர் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்திற்கான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அஜித் கிருஷ்ணன் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர். அனைவரும் விங் கமாண்டர்கள் அல்லது குரூப் கேப்டன்களாக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அஜித் கிருஷ்ணன் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்ல தேர்வாகி உள்ள அஜித் கிருஷ்ணன், கடந்த 1982 ஏப்ரல் 12ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சி பெற்ற இவர், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியிலும் (DSSC) பயிற்சி பெற்றவர். கடந்த 2003 ஜூன் 21ம் தேதி இந்திய விமானப்படை வீரராக போர்-விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார்.

விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, இவருக்கு ஜனாதிபதியின் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார். இவர் 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவமிக்கவராக திகழ்ந்து வருகிறார். குரூப் கேப்டன் பொறுப்பில் உள்ள அஜித் கிருஷ்ணனுக்கு எஸ்யு-30, எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார்,டார்னியர், ஏஎன்-32 Su-30 MKI, MiG-21, MiG-21, Mig-29, Jaguar, Dornier, An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் உள்ளன.

The post ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்ல தமிழ்நாட்டை சேர்ந்த ‘கேப்டன் அஜித் கிருஷ்ணன்’ தேர்வு: இந்தியாவின் கனவு திட்டத்தில் தமிழரின் பங்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnan ,Tamil Nadu ,India ,Chennai ,Ajith Krishnan ,Gaganyaan ,Indian Space Research Organization ,ISRO ,Kaganyan ,Captain Ajith Krishnan ,
× RELATED அரக்கோணம் அருகே மின் இணைப்பு...