×

கடகராசி குழந்தை வளர்ப்பு

இங்கு கடகராசி என்பது, கடக ராசி மற்றும் கடக லக்கினத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், ஜூன் 22 முதல் ஜூலை 21-க்குள் பிறந்தவர்களுக்கும் பொருந்தும். கடகராசியின் அதிபதி சந்திரன் என்பதால், இவர்கள் தன் மனசாட்சிப்படி நடப்பார்கள். மனதின் கட்டளைப்படி செயல்படுவர். அறிவின் வழிகாட்டுதலைப் புறக்கணிப்பார்கள்.

அன்பின் உருவங்கள்

அன்பு இல்லாத இடத்தில் இவர்களால் உயிர் வாழமுடியாது. செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு அல்லது அடுத்த வீட்டுக் குழந்தையையாவது எடுத்து கொஞ்சிக் கொண்டே இருப்பார்கள். தாத்தா பாட்டியிடம் மிகுந்த பிரியம்கொண்ட இவர்கள், எங்கு தாத்தா பாட்டிகளைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்வார்கள் அல்லது அவர்கள் முகம் பார்த்து சிரித்து நலம் விசாரிப்பர்.

உதவும் கரங்கள்

கடக ராசி குழந்தைகள், பள்ளியிலும் வீட்டிலும் உதவி எதிர்பார்த்து இருக்கும் எவருக்கும் மனமுவந்து உதவி செய்வதில் விருப்பம் உள்ளவர்கள். இவர்களில் சிலர், அதாவது ஜூன்மாதக் கடைசி வரை பிறந்தவர்கள், சந்திரன் ஆட்சி உச்சமாக இருப்பவர்கள், சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஜூலை பிற்பகுதியில் பிறந்தவர்களுக்கு சூரியனின் ஆதிக்கமும், பண்பும் கலந்து இருப்பதைப் பார்க்கலாம்.

பெண் பாசம்

பொதுவாக கடக ராசிக் குழந்தைகள், தாய்ப்பாசம் மிக்கவர்களாக, ஆசிரியரைவிட ஆசிரியைகளிடம் அதிக பாசம் கொண்டவர்களாக, அக்காள் தங்கச்சி மீது அதிக அன்புகொண்டவர்களாக இருப்பது வழக்கம். சந்திரன், மாதுர்காரகன் என்பதால், கடக ராசி யினரை `மாதா ராசி’ என்று குறிப்பிடுவது வழக்கம். தாய்மைப் பண்பு மிகுந்த இந்த ராசிக் குழந்தைகள், பிற நலிந்த குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படுகின்ற, சுகவீனமான குழந்தைகள் போன்றோரிடம் அன்பு செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை விரும்புவர். படிக்காத சிறுவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து அவர்களை வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்பதில் கவனம் உள்ளவர்கள்.

மென்கலைகளில் ஆர்வம்

இவர்கள் பெரும்பாலும், உடல் வலிமை மிக்க விளையாட்டுகளில் ஈடுபடுவது கிடையாது. ஓடி ஆடி விளையாடுவது, பந்து எறிந்து விளையாடுவது, கிரிக்கெட், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் இவர்களுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. கைவினைத் தொழில் சார்ந்த, கலைத்துறை சார்ந்த வேலை களில் மிகுந்த பிரியமுடன் இருப்பார்கள். படம் வரைதல், இசை, கம்ப்யூட்டரில் ஓவியம் வரைதல், தையல் எம்பிராய்டரி, வயர் கூடை பின்னுதல், வெஜிடபிள் கார்விங், சாக்பீஸில் உருவங்கள் செதுக்குதல், மலர் அலங்காரம், ரங்கோலி, பூக்கோலம் போன்ற மென்மையான கலை வடிவங்களில் பயிற்சி பெற விரும்புவார்கள். கடக ராசியில் பிறந்த ஆண்குழந்தைகளும், இக்கலைகளில் விருப்பமும் ஆர்வமும் காட்டுவதுண்டு. பள்ளி கல்லூரி காலங்களில் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பரிசுகளை அள்ளிக்கொண்டு வருவார்கள்.

சத்தியாக்கிரகம்

அதிராமல் பேசும் இக்குழந்தைகளிடம், யாரேனும் குரலை உயர்த்திப் பேசிவிட்டால் பயந்துவிடுவர். அடித்தால்கூட வாங்கிக்கொள்வார்கள். ஆனால், இனி உன்னுடன் பேச மாட்டேன் என்று புறக்கணித்தால், இந்த குழந்தைகளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும். உணவு உண்ணாமல் தண்ணீர்கூட குடிக்காமல் சத்தியாகிரகம் செய்வார்கள். மனவலிமை படைத்த இக்குழந்தைகளிடம் தேவை இன்றி சவால் விடக்கூடாது. உன்னுடன் பேசமாட்டேன். உனக்கு எதுவும் வாங்கித் தரமாட்டேன் என்று சொல்வதெல்லாம் அவர்களின் மனது தாங்கிக் கொள்ளாது. மிகவும் நொந்துபோய்விடுவர். பதின்ம வயதில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது, இவர்கள் தற்கொலைசெய்து கொள்ளவும் துணிந்துவிடுவர்.

தூய்மைவாதி (puritans)

கடகராசிக் குழந்தைகளுக்கு யாரேனும் தவறுசெய்தால் பெரிய அளவில் இவர்களின் மனநிலை பாதிக்கப்படும். இவர்களால் தவறுகளை ஒப்புக் கொள்ளவே முடியாது. அதை நியாயப்படுத்த ஆயிரம் காரணம் எடுத்துக் கூறினாலும் தவறு தவறுதான் என்பதில் உறுதியாக இருப்பார்கள். தவறு செய்பவர்களை விட்டு விலகிவிடுவர். மதிக்க மாட்டார்கள். பள்ளி கல்லூரிகளில் காதலிக்கும் மாணவர்கள், மிகுந்த விஸ்வாசத்தை எதிர்பார்ப்பார்கள். அதிக பொசசிவ்னஸோடு இருப்பார்கள்.

மனம்கவர் வண்ணம்

இவர்களுக்கு ஆரஞ்சு கலர், அடர் சிவப்பு ஆகவே ஆகாது. மென்மையான இளம் மஞ்சள் நிறம், சந்தன கலர் இவர்களுக்கு மிகவும் விருப்பமான நிறங்கள் ஆகும்.

நட்பின் இலக்கணம்

நட்பைக் கற்பைப் போல போற்றுவர். பள்ளியில் தன் நண்பர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உயிரைக் கொடுத்தும் அவர்களுக்கு உதவி செய்வார்கள். வகுப்புத் தலைவர் அல்லது பள்ளிக்கூட மாணவர் தலைவர் என்ற பொறுப்புகளை ஏற்று அதில் தன்னலமின்றி முழுக்க முழுக்க பொதுநல சிந்தனையோடு செயல்படுவர்.

குணசீலர்

இவர்களுக்கு பணம் செல்வம் செல்வாக்கு முக்கியம் கிடையாது. உண்மை, நேர்மை, வாய்மை, ஒழுக்கம் ஆகியவைதான் முக்கியமாகப் படும். இக்குழந்தைகள் ஹோட்டல் சாப்பாடு, வெளியே நண்பர்களோடு போய் ஊர் சுற்றுவது, பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது போன்றவற்றை விரும்புவதில்லை. அதே வேளையில், நண்பர்களைத் தமது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்குத் தானே ஒரு பிறந்தநாள் விருந்து வைத்துக் கொண்டாடுவதில் அதிக விருப்பம் கொள்வர்.

கற்பனை கதாநாயகர்

கனவுகளிலும் கற்பனைகளிலும் அதிக நேரம் செலவழிக்கும் இக்குழந்தைகள் சரித்திர கால ஹீரோக்கள் போலத் தங்களைக் கற்பனை செய்து கொள்வார்கள். பலர் முன்னிலையில் வர வெட்கப்படும் இவர்கள் (பேக் ஸ்கிரீனில்) திரைக்குப் பின்னால் நிறைய கடுமையான பணிகளைத் தங்கள் பள்ளியின் வெற்றிக்காகச் செய்வார்கள். யாரேனும் இவர்களைக் கவனிக்காமல் சென்றுவிட்டால், வேண்டுமென்றே தன்னை அலட்சியப்படுத்தி விட்டதாகக் கற்பனை செய்து கொண்டு அவர்களிடம் மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் பேசாமல் இருப்பார்கள்.

பாராட்டுப் பசி

கடக ராசிக்காரர்கள், வாழ்வின் உயிர்மூச்சு அங்கீகாரமும் பாராட்டும் ஆகும். இவர்களின் கடும் உழைப்புக்கும் தியாகத்துக்கும் பதிலாக, இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டு.. பாராட்டு.. பாராட்டு. எல்லாம் நீதான்.. நீதான்.. நீதான்.. என்று தினமும் நண்பர்களும் உறவுகளும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

The post கடகராசி குழந்தை வளர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!