×

கால்வாயில் குப்பை போடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உள்ள கால்வாய்களில் பொதுமக்கள் குப்பை போடுவதை தவிர்க்க வேண்டும், என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், கால்வாய் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக, ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை (ICCC) மையத்தில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் நடந்து வரும் வடிகால் பணிகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு ஆய்வுகள் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து கால்வாய்களையும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள கால்வாய்களில் பொதுமக்கள் குப்பை போடுவது அதிகரித்து வருகிறது. இதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

அனைத்து கால்வாய்களிலும் குப்பை போடுவதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரையில் ரூ.400 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்துள்ளது. தற்போது மீதமுள்ள ரூ.232 கோடி செலவிலான பணிகள் நடந்து வருகிறது. மழை நேரங்களில் விழும் மரங்களை பொதுமக்கள் முன்கூட்டியே கண்டறிந்து மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும்பட்சத்தில் அந்த மரத்தை முன்கூட்டியே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் 15 நாட்களுக்குள் முடிவடையும். பிரதான மக்கள் கூடும் பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை (ICCC) மையத்தில் இருந்தவாறு பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post கால்வாயில் குப்பை போடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Commissioner ,Radhakrishnan ,Dinakaran ,
× RELATED சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர்...