×

சீஸ் சாப்பிடலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்கு நாம் பழகிவிட்ட காரணத்தாலேயே பர்கர், பீட்சா போன்ற அனைத்தும் சீஸால் நிறைந்திருக்கிறது. நாக்கைச் சப்புக்கொட்டவைக்கும் சீஸின் சுவைக்கு இன்று பலரும் அடிமை. அது ஒருபுறமிருக்கட்டும். சீஸில் என்னவெல்லாம் இருக்கின்றன… இது ஆரோக்கியமானதுதானா… எல்லோரும் சாப்பிடலாமா.. யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என பாரப்போம்:

மக்கள் உட்கொள்ளும் பால் பொருட்களில் சீஸ் முதன்மையானது. இன்று சீஸ் பல்வேறு சுவைகள், வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகிறது. சீஸ் கால்சியம், கொழுப்பு மற்றும் புரதத்தின் சிறந்த மூலமாகும்.வளரும் பருவத்தினரும் பெரியவர்களும் அளவாகச் சாப்பிடுவதில் தவறில்லை. பொதுவாகவே, குழந்தைகளுக்குப் பால் சார்ந்த பொருட்களை அளவுடன் கொடுப்பது வழக்கம். அதிகம் கொடுத்தால், குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, சீஸையும் அளவாகத்தான் கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு ஸ்லைஸ் (Slice) சீஸ் கொடுக்கலாம்.

சீஸ் உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்களுக்கு உற்ற தோழன். இதன் அதிகக் கலோரியும் கொழுப்புச்சத்தும் உடல் எடை கூடுவதற்கு உதவி புரியும். சீஸில் அதிக கால்சியம் இருப்பதால், பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ் (French Fries) போன்ற வறுத்த உணவுகளைவிட சீஸ் மிகவும்
ஆரோக்கியமானது.

சீஸை, பால் தொடர்பான ஒவ்வாமை (லாக்டோஸ் இன்டாலரன்ஸ் – Lactose Intolerance) உள்ளவர்களும், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் தவிர்ப்பது நல்லது. இதிலிருக்கும் அதிகப் புரதச்சத்து, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நல்லதல்ல. இதை விடுவதற்கு மனமில்லாத உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் அளவோடு பயன்படுத்தலாம்; புரதச்சத்து குறைந்த சாஃப்ட் சீஸைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் புரதச்சத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். சீஸில் கால்சியம், புரதம், வைட்டமின் பி12, ஜிங்க், பாஸ்பரஸ் (Phosphorus), வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருந்தாலும், கவனமாக இல்லாவிட்டால் கலோரி மளமளவென ஏறிவிடும்.

இதிலிருக்கும் ஈரப்பதத்தை அடிப்படையாகக் கொண்டு ஹார்டு சீஸ், சாஃப்ட் சீஸ் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஹார்டு சீஸைவிட சாஃப்ட் சீஸில் கலோரிகள் குறைவு.சீஸ் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீஸில் அதிக கொழுப்புச் சத்து இருந்தாலும், அதை அளவோடு சாப்பிடுவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொகுப்பு: பாலாஜிகணேஷ்

The post சீஸ் சாப்பிடலாமா? appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungumum ,Dinakaran ,
× RELATED எடையும் குடைமிளகாயும்!