×

பஸ் ஸ்டாப் திறப்பு விழா

 

காரைக்குடி, மே 18: காரைக்குடி அருகே கல்லல் ஆலம்பட்டு வேப்பம்குளம் கிராமம் அறிகுறிஞ்சியில் ஒன்றிய பொதுநிதி ரூ.4.5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் துவக்கவிழா நடந்தது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் சொர்ணம் அசோகன், பஸ் ஸ்டாப்பை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ‘எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் முதல்வர் நகர்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புற பகுதிகளும் இருக்க வேண்டும் என அறிவித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் ஒன்றியப் பகுதிகளுக்கு தேவையான நிதி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மழை, வெயிலில் நிற்பதால் பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இக்கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. தற்போது ரூ.4.5 லட்சத்தில் இந்த பஸ் ஸ்டாப் கட்டப்பட்டுள்ளது. முதல்வரின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நமது ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 கிராமங்களில் ரூ.11 கோடியில் சாலை அமைக்கப்பட உள்ளது’ என்றார். நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், ஊராட்சி தலைவர்கள் அசோகன், சித்ராகணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post பஸ் ஸ்டாப் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Bus ,Stop ,Karaikudi ,Kallal Alampattu Veppamkulam ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில்...