×

புல்டோசர் இடிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; மதவழிபாட்டு தல ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பாஜ ஆளும் மாநிலங்களில் புல்டோசர்களை கொண்டு வீடுகளை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘குற்றம் சாட்டப்பட்டாலே அவர்களின் வீடுகளை இடிப்பீர்களா என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க நாடு முழுவதும் இடைக்கால தடை விதித்து கடந்த 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் யாருக்கும் எதிரி கிடையாது. இருப்பினும் அனுமதி பெறாத கட்டுமானங்களை கண்டிப்பாக அங்கீகரிக்க முடியாது. ஒரே நாளில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வீடுகள் இடிக்கப்படுவது கிடையாது. சில வாரங்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட நிர்வாகத்தால் நோட்டீஸ் வழங்கி போதிய அவகாசம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும் எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரும் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே குறிவைக்கப் படுவதில்லை. இதுபோன்று வெளியாகும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானதாகும். குற்றம் செய்த நபர் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியதில்,‘‘இந்த விவகாரத்தில் புல்டோசர்கள் கொண்டு வீடுகளை இடிப்பதை ஏற்க முடியாது. ஆக்கிரமிப்புகள் அகற்றத்தை அறிந்து கொள்ளும் விதமாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும். கடந்த ஐந்து வருடங்களாக புல்டோசர்களை கொண்டு கட்டிடங்கள் இடிப்பதை சில மாநில அரசுகள் வழக்கமாக கொண்டுள்ளது. மேலும் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் செயலை அனுமதிக்க முடியாது .ஒருவர் மீது கிரிமினல் புகார் அல்லது குற்றச்சாட்டு எழுந்தாலே அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்று ஏதேனும் சட்ட விதிகள் உள்ளதா?.அப்படி எதுவும் கிடையாது என்பதை மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்பு எந்த வகையில் இருந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது.

அது கோவில், குருத்வாரா, தர்கா என மதவழிபாட்டு தலமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக சாலையிலோ, அல்லது நீர்நிலை போன்ற பொதுசொத்தை ஆக்கிரமித்து இருப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும் நாடு முழுவதும் குடியிருப்புகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படும் விவகாரத்தில் வழிகாட்டுதல்கள் வழங்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பையும் நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

The post புல்டோசர் இடிப்பு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; மதவழிபாட்டு தல ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,BJP ,
× RELATED புல்டோசர் கொண்டு வீடுகள் அகற்றம்; ஒரு...