தஞ்சை: தஞ்சை பனகல் கட்டிடம் முன் திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று மாலை காவிரி உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்து தி.க.தலைவர் கி.வீரமணி பேசியது: காவிரி நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். உச்ச நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி, ஒன்றிய அரசின் நாற்காலிக்கு காலாக உள்ள இருவருக்கு மட்டுமே பட்ஜெட்டில் ஏராளமாக கொடுத்துள்ளார். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. பட்ஜெட் என்பது வரவு- செலவு திட்டம்.
தற்போது இதை ஒன்றிய மைனாரிட்டி அரசு அரசியல் ஆயுதமாக மாற்றி உள்ளது. நமக்கு நீர் பிரச்னையும் முக்கியம். நிதி பிரச்னையும் முக்கியம். நாங்கள் பிரிவினையை கேட்கவில்லை. தமிழ்நாட்டின் வரிப்பணத்தை நீங்கள் மற்றவர்களுக்கு வாரி கொடுக்கிறீர்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘நான் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நன்மை செய்வேன்’ என்றார். அதுதான் இந்த அணியினுடைய வெற்றி. கலைஞர் உறவுக்கு கைகொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார். அது எந்த உரிமையாக இருந்தாலும் அந்த உரிமைக்காக கட்சி இல்லை, மதம் இல்லை. அனைவரும் ஒன்று சேர்வோம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.
The post பட்ஜெட்டை அரசியல் ஆயுதமாக மாற்றியுள்ளது பாஜ அரசு: கி.வீரமணி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.