×

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முடிவுசெய்யும் என்று நீதிபதி அறிவித்தார். ஜாமின் வழக்கை மார்ச் 12ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது. ஐகோர்ட்டும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். அதில், “நான் கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். என் கைது சட்டவிரோதம். வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், இந்த வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. அதனால் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது. ஜாமீன் வழங்கிவிட்டால் சுப்ரீம் கோர்ட்டு கேள்வியெழுப்பிவிடும். எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்ததுடன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Ankit Tiwari ,Enforcement Directorate ,Madurai High Court ,Supreme Court ,Madurai Branch ,Dinakaran ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...