×

கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக புகார்; திரிணாமூல் எம்பியை பதவி நீக்குவது மிகக்கடுமையான தண்டனை: சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் கடிதம்

புதுடெல்லி: கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்வது மிகக்கடுமையான தண்டனையாக இருக்கும் என மக்களவை சபாநாயகருக்கு காங்கிரசின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க தொழிலதிபரிடம் லஞ்சம் வாங்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய மக்களவை நெறிமுறைகள் குழு, மஹுவாவை பதவியிலிருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை நாளை மக்களவையில் கொண்டு வரப்பட உள்ளது.

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரசின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று எழுதிய 4 பக்க கடிதத்தில், கூறியிருப்பதாவது:
இந்த புகார் தொடர்பாக நெறிமுறைக் குழு, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றி, சரியான முறையில் விசாரணையை நடத்தியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுவரை நெறிமுறைக் குழுவானது பொதுவான நடத்தை விதிமீறல் விவகாரங்களை மட்டுமே விசாரித்துள்ளது. அவற்றிலும் அறிவுரை வழங்குதல், கண்டித்தல், இடைநீக்கம் செய்தல் போன்ற தண்டனைகளை மட்டுமே பரிந்துரைத்துள்ளது.

ஆனால் மஹுவா விவகாரத்தில் முதல் முறையாக பதவி நீக்கம் செய்யக் கூறி உள்ளது. இதன்படி, மஹுவா பதவி நீக்கம் செய்யப்பட்டால், அது மிகக் கடுமையான தண்டனையாக இருக்கும். உங்கள் தலைமையின் கீழ் எந்த அநீதியும் இழைக்கப்படாது என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

The post கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக புகார்; திரிணாமூல் எம்பியை பதவி நீக்குவது மிகக்கடுமையான தண்டனை: சபாநாயகருக்கு ஆதிர் ரஞ்சன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Trinamool ,Adhir Ranjan ,New Delhi ,Mahua Moitra ,Dinakaran ,
× RELATED ஒரு எம்பியின் நீக்கத்திற்காக 63...