×
Saravana Stores

கருங்கலில் பிரேக் பழுதால் சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்

* டயர்கள், கற்களை போட்டு இளைஞர்கள் நிறுத்த முயற்சி

கருங்கல் : குமரி மாவட்டம் கருங்கலில் இருந்து மத்திக்கோடு, திங்கள்சந்தை வழியாக நாகர்கோவிலுக்கு தடம் எண் 9 ஏ அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று காலை சுமார் 9 மணியளவில் இந்த பஸ் கருங்கலில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் அலுவலகம் செல்பவர்கள் என்று 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே பஸ்சில் திடீரென பிரேக் பழுதானது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பிரேக் பிடிக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பஸ் நிற்கவே இல்லை. அந்த சாலை இறக்கமான பகுதி என்பதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. விபரீதத்தை உணர்ந்த டிரைவர் பயணிகளிடம், தயவு செய்து கம்பி, இருக்கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் பயணிகளும் பதற்றமடைந்தனர். அவர்கள் பஸ் ஜன்னல் வழியாக சாலையில் செல்லும் ஒவ்வொருவரிடமும் உதவி கேட்டனர். இதை கண்டதும் இளைஞர்கள் சிலர் அதிரடியாக செயல்பட்டு பைக்கில் பஸ்சை முந்தி சென்று சாலையோரம் கிடந்த கட்டைகள், கற்களை எடுத்து பஸ் டயரின் குறுக்கே போட்டு நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

இருந்தாலும் இளைஞர்கள் சளைக்கவில்லை. பஸ்சில் இருந்த இளைஞர்கள் சிலரும் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து இளைஞர்களின் பைக்கில் ஏறிக்கொண்டு உதவிக்கு கைகோர்த்தனர்.
சில இளைஞர்கள் எதிரே வரும் வாகன ஓட்டிகளிடம் ‘ஓரம் போ… ஓரம் போ…’ என எச்சரித்தவாறு சென்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அரசு பஸ்சுக்கு வழிவிட்டு விலகி சென்றனர்.இதனால் டிரைவர் சற்று நிம்மதியடைந்தார். இடையூறு இன்றி அரசு பஸ் சென்றது.

பஸ்சுக்கு முன்னால் பைக்கில் சென்ற இளைஞர்கள் சற்று தொலைவில் தனியார் டயர் பஞ்சர் ஒட்டும் கடை இருப்பதை கண்டனர். உடனே அங்கிருந்த பழைய டிப்பர் லாரி டயரை எடுத்து ஓடும் அரசு பஸ் டயரின் குறுக்கே போட்டனர்.டயர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் அதன் வேகம் சற்று குறைந்தது. ஆனாலும் நிற்காததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
சற்று தொலைவில் சாலையோரம் ஏற்றமான பகுதி வந்தது. அங்கு மண்மேடு இருப்பதை டிரைவர் கண்டார்.

இதுதான் சரியான நேரம் என சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர் பஸ்சை மண் மேட்டின் மீது ஏற்றினார். டிரைவர் நினைத்தவாறு அரசு பஸ் மண்மேட்டின் மீது ஏறி நின்றது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. சமயோஜிதமாக செயல்பட்ட இளைஞர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவரை பயணிகள் மனதார பாராட்டினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ் பிரேக் பிடிக்காமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

பஸ்சில் இருந்து குதித்த மாணவிகள்

அரசு பஸ்ஸில் பிரேக் பிடிக்காததால் எங்காவது மோதிவிடுமோ என்று பயந்த 2 மாணவிகள் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தனர். பஸ் மெதுவாக சென்றதால் கீழே குதித்த மாணவிகள் காயமின்றி தப்பினர்.

மாணவர்கள் தப்பினர்

பஸ் பிரேக் பிடிக்காமல் வந்த நிலையில், மத்திக்கோடு பகுதியில் குறுக்கு சாலையில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு கல்லூரி பஸ் மெயின் ரோட்டில் நுழைந்தது. இதை பார்த்த இளைஞர்கள் கல்லூரி பஸ் டிரைவரிடம் விபரீதத்தை கூறினர். இதையடுத்து அவர் வேகமாக பஸ்சை ஒதுக்கினார்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post கருங்கலில் பிரேக் பழுதால் சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் appeared first on Dinakaran.

Tags : Karunkal ,Karungal ,Kumari district ,Nagercoil ,Mathikode ,Thingalchandi ,Dinakaran ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக 27 பேரிடம் ரூ.1.47...