×
Saravana Stores

வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிப்பு

*ஓட்டு பதிவு பணி அலுவலர்கள் தீவிரம்

திருவாரூர் : திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்காளர் பட்டியல் அனுப்புவதற்காக அலுவலர்கள் மூலம் பூத்வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்றன.
நாட்டின் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் தேதியானது 7 கட்டங்களாக நடத்துவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதில் தமிழகத்தில் இருந்து வரும் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம்தேதி தேர்தல் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் ஆணையத்தின் உத்தரவு படி 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து அந்தந்த எம்.எல்.ஏ தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட எல்லைகளில் 9 சோதனை சாவடிகளும் மற்றும் மாநில எல்லைகளில் 2 சோதனை சாவடிகளும் என மொத்தம் 11 சோதனை சாவடிகளில் வாகன சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மாவட்டத்தில் திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 726 ஆண், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 164 பெண், இதரர் 30 பேர் என 2 லட்சத்து 79 ஆயிரத்து 920 வாக்காளர்கள் இருந்து வரும் நிலையில் இவர்களுக்காக 308 வாக்குசாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருத்துறைப்பூண்டி தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 69 ஆண், ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 507 பெண், இதரர் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 584 வாக்காளர்களுக்காக 275 வாக்குசாவடிகளும், நன்னிலம் தொகுதியில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 131 ஆண், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 194 பெண் மற்றும் இதரர் 19 என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 344 வாக்காளர்களுக்கு 315 வாக்குசாவடி மையங்களும், மன்னார்குடி எம்.எல்.ஏ தொகுதியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 630 ஆண், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 922 பெண், இதரர் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 630 வாக்காளர்களுக்காக 285 வாக்குசாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மாவட்டம் முழுவதும் 4 தொகுதிகளிலும் இருந்து வரும் 5 லட்சத்து 10 ஆயிரத்து 556 ஆண், 5 லட்சத்து 35 ஆயிரத்து 857 பெண், இதரர் 65 பேர் என மொத்தம் 10 லட்சத்து 46 ஆயிரத்து 478 வாக்காளர்களுக்காக மொத்தம் ஆயிரத்து 183 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ரேண்டம் எனபடும் கணினி மூலம் 5 ஆயிரத்து 801 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்கு 2 கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் ரேண்டம் முறையில் தேர்வு செய்யபட்டு கலெக்டர் அலுவலகத்தின் பாதுகாப்பு அறையிலிருந்து அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட்டு வருவதுடன் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களிலிருந்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தேர்தலுக்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் நாளில் வாக்குபதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அந்தந்த பூத்துக்குரிய வாக்காளர் பட்டியல் வழங்குவதற்காக அதனை பிரிக்கும் பணி நடைபெற்றது. திருவாரூர் தாலுகா அலுவலகத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக பூத் வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvarur Assembly Constituency ,18th ,Lok Sabha elections ,
× RELATED திருவாரூரில் பெய்து வரும் கனமழையால்,...