×

பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதி: கைதான 5 பயங்கரவாதிகள் பற்றி திடுக் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதி நடந்ததாக கைதான 5 பயங்கரவாதிகள் பற்றி திடுக் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் பயங்கரவாதிகள் சிலர், நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு பதுங்கி இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு என்ஐஏ அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று அதிகாலை சுல்தான்பாளையா, கனகநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்த 5 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். அந்த வீட்டில் கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாக்கி-டாக்கி, வெடி மருந்துகள், செல்போன்கள் போன்றவை இருந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார் பிடிபட்டவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்கள் சையது சுகைல், உமர், ஜாகித், முதாசீர், பைசல் என்பதும், பெங்களூருவில் நாச வேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட தயாராக இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து துப்பாக்கி – வெடிபொருட்கள் மற்றும் 12 செல்போன்கள், 45 தோட்டாக்கள், 7 கைத்துப்பாக்கிகள், வாக்கி-டாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பெங்களூருவில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை குறிவைத்து பயங்கரவாத செயலை அரங்கேற்ற திட்டமிட்டதும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.

மேலும் சிறையில் இருந்தபோது 2008ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நசீர் மற்றும் தொழிலதிபர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஜுனைத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களது அறிவுரைபடி பெங்களூருவில் பயங்கரவாத திட்டங்களை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி சிறையில் இருந்து வெளியான 5 பேரும் கூட்டாக சுல்தான்பாளையா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்து போன்றவை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதனை நேற்று போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைதாகியுள்ள 5 பேரும் வெடிகுண்டுகளை தயாரிக்கவும், ஆயுதங்களை கையாளவும் பயிற்சி பெற்று வந்தது மற்றும் பெங்களூருவில் மெஜஸ்டிக் பிஎம்டிசி பஸ் நிலையம் உள்ளிட்ட 10 இடங்களில் குண்டுகளை வைத்து வெடிக்க செய்து நாசவேலையில் ஈடுபட தயாராகி வந்தது தெரியவந்துள்ளது. இவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர். கைதான 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் உள்ள என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post பெங்களூருவில் 10 இடங்களில் குண்டு வைக்க சதி: கைதான 5 பயங்கரவாதிகள் பற்றி திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : bangalore ,Dinakaran ,
× RELATED பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர்...