×

பூத்துக்குலுங்கும் மலர் செடிகளுடன் புது பொலிவுடன் காட்சியளிக்கும் ஊட்டி ரயில் நிலைய பூங்கா

ஊட்டி : ஊட்டி ரயில் நிலைய பூங்காவில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி ரயில் நிலையம் 1908ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக ஊட்டி மலை ரயிலாக அறிவிக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுபாளையத்தில் இருந்து இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டியை வந்தடையலாம். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயங்களில் கூட்டம் அலைமோதும்.

இதற்கிடையே ரயில் நிலையம் தொடங்கிய சில ஆண்டுகளில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ரயில் நிலையம் முன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் இப்பூங்கா பராமரிக்கப்பட்டு மலர் கண்காட்சி சமயத்தில் தோட்டக்கலை துறை சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்று சுழற் கோப்பைகள் வென்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டுக்கு பின்னர் பூங்கா பராமரிப்பின்றி பொலிவிழந்தது. அந்த இடத்தில் ரயில்வே கேண்டீன் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பாரம்பரிய நீராவி அறக்கட்டளை ரத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து, தென்னக ரயில்வே நிர்வாகிக்கு மனு அளித்ததால் பூங்காவை அகற்றி கேன்டீன் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 4 ஆண்டுக்கு பிறகு தற்போது ஊட்டி ரயில் நிலைய பூங்கா சீரமைக்கப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு உள்ளது.

பூங்காவில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு நீரூற்றுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பூங்கா சுவர் மற்றும் ரயில் நிலைய சுவர்களில் வண்ணம் தீட்டப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஐ லவ் ஊட்டி என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ரெயில்வே எஞ்சின், ரயில் அருங்காட்சியகம், கடிகாரம் உள்ளிட்ட இடங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். ரயில் நிலையம் வரும் பயணிகள் இளைப்பாற வசதியாக பூங்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post பூத்துக்குலுங்கும் மலர் செடிகளுடன் புது பொலிவுடன் காட்சியளிக்கும் ஊட்டி ரயில் நிலைய பூங்கா appeared first on Dinakaran.

Tags : Ooty Railway Station Park ,Ooty ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஊட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை