×

இருட்டடிப்பு

மாணவ பருவத்தில் மனதில் பதியும் வரலாற்று பாடங்கள், அவர்கள் வாழ்க்கை பயணத்தில் நீங்காத நினைவாக நிலைத்து விடுகிறது. வரலாற்று பாடங்கள் இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் அதற்கு முந்தைய அரசர்களின் சரித்திரத்தை படம்பிடித்து காட்டும்படி அமைந்திருந்தது. ஆனால், 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு வரலாற்று பாடங்கள் பல திருத்தி எழுதப்பட்டன. பல பாடங்கள் நீக்கப்பட்டன. புதிய பாடங்கள் இணைக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் சிபிஎஸ்இ சமூக அறிவியல் பாடத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் தலைப்பில் திப்பு சுல்தான் பாடம் நீக்கப்பட்டு வீரசாவர்க்கர் பாடம் இணைக்கப்பட்டது.

சமூக சீர்திருத்தவாதிகள் தலைப்பில் அம்பேத்கர் வரலாறு மற்றும் போராட்டம் மாற்றி எழுதப்பட்டது. பெரியாரின் பாடம் நீக்கப்பட்டது. இப்படி நாட்டுக்காகவும், சமூக சீர்திருத்தம், சுயமரியாதை கருத்துகளை முன்வைத்து போராடிய தலைவர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. அடுத்த தலைமுறையினர், நாட்டுக்காக தியாகம் செய்த உண்மையான தலைவர்களை மறந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
பள்ளி கல்வி தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்க ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்’ தொடங்கப்பட்டது.

என்சிஇஆர்டி நிர்வாகம் கொரோனா காரணமாக மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி சில பாடங்களை நீக்கியுள்ளது. தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் கற்றலுடன் கூடிய பயற்சிக்கு வாய்ப்பளிப்பதாக, குஜராத் கலவரம், முகலாய நீதிமன்றங்கள், அவசரநிலை, நக்சல் இயக்கம் ஆகியன தேவையற்றது என நீக்கியுள்ளது. இதே போல் பதினோராம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் விருப்பம் ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.

ஒன்றிய அரசு தான்தோன்றி தனமாக தங்களுக்கு தெரிந்த புனைவுகளை பாடத்திட்டத்தில் புகுத்தி இளம் நெஞ்சில் நஞ்சை வார்த்து இந்திய சரித்திரத்தின் பின்னணியை மாற்றி எழுதி வருகிறது. இந்த நடவடிக்கைகள் தற்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் சமூகத்தில் பேராபத்தை விளைவிக்கும். கர்நாடக பாடத்தில் அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கர் பறவை மீது ஏறி பறந்து மகாராஷ்டிரா வந்து மீண்டும் சிறைக்கு திரும்புவார் என்ற புனைவுகளை சித்தரித்து அவர் அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களின் அறிவுத்திறனை விழிப்படைய செய்வதற்கு பதில் மழுங்கடித்துவிடும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஒன்றிய அரசு, சமூக அறிவியல் பாடங்களில் பல வரலாற்று சம்பவங்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் சரித்திரத்தை இருட்டடிப்பு செய்து வருவதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. ‘நவீன இந்தியாவின் வரலாறு 2014ம் ஆண்டில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று மோடிஜி நினைக்கிறார் போலும்’ என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டலுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

The post இருட்டடிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...