×

பவானிசாகர் அணையில் இருந்து துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் வெளியேறும் தண்ணீர்-குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி

சத்தியமங்கலம் : பவானிசாகர் அணையில் இருந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வெளியேறும் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
பவானிசாகர் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதனிடையே தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக கீழ் பவானி வாய்க்காலில் ஐந்து கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் மதகு பகுதியில் தண்ணீர் கருப்பு நிறத்தில் ஒரு விதமான துர்நாற்றம் வீசிய நிலையில் வெளியேறுகிறது.

இதன் காரணமாக கீழ்பவானி வாய்க்காலில் இருந்த மீன்கள் முழுவதும் இறந்துவிட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக்கழிவு நீர் பவானி ஆற்றில் கலந்து பவானிசாகர் அணை நீரில் தேங்கியதால் தண்ணீர் கருப்பு நிறமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கீழ்பவானி வாய்க்காலில் வெளியேறும் தண்ணீரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி மற்றும் பவானிசாகர் பேரூராட்சிக்கு குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் வெளியேறுவதால் இந்த தண்ணீரை அருந்தினால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

இந்த தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தி என்ன மாதிரியான ரசாயனம் கலந்துள்ளது?, எந்த தொழிற்சாலையில் இருந்து இது போன்ற கழிவு நீர் வெளியேற்றப்பட்டு பவானி ஆற்றில் கலக்கப்படுகிறது? என்பதை கண்டறிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நீர்வள ஆதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post பவானிசாகர் அணையில் இருந்து துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில் வெளியேறும் தண்ணீர்-குடிநீருக்கு பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Sathyamangalam ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை:...