×

பாஜ ஆட்சியில்தான் மீனவர்கள் கைது அதிகம்: மதுரை எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்

மதுரை: இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை மீட்கவும், மீனவர்கள் மீதான வன்முறை தாக்குதலை தடுக்கவும், ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் அளித்துள்ள பதிலில் கூறியதாவது: பாஜ ஆட்சியில் உள்ள 2014 – 24 காலத்தில் 3,137 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 2004 – 2013 காலத்தில் (காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலம்) 2,915 பேரும், வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2003ல் 606 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய மீனவர்கள் மீது 13 தாக்குதல்களை அண்டை நாடுகளின் கடற்படைகள் தொடுத்துள்ளன. அண்டை நாட்டு சிறைகளில் விடுவிக்கப்படாமல் தற்போது இருப்பவர்கள் 266 பேர். 2005ல் மட்டுமே ஒரு தாக்குதல், கைது கூட இல்லை. கைது, தாக்குதல் பற்றிய தகவல் வந்தவுடன் இந்திய அரசு சார்பில், விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தூதரக பணியாளர்கள் சிறைகளுக்கு சென்று கைதிகளின் பாதுகாப்பு, நலம் விசாரிக்கப்படுகின்றன. சட்ட உதவிகள் செய்யப்படுகின்றன. இரு தரப்பு தீர்வு முறைமைகள் உள்ளன. மீனவர் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் பலவந்தம் இல்லாமல் அணுகுமாறு அண்டை நாடுகளின் அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன் கூறும்போது, ‘‘அரசு புள்ளி விவரங்களையும், வழக்கம் போல அலுவல்ரீதியான வார்த்தைகளையும் மட்டுமே தெரிவித்துள்ளது. அரசியல் உறுதியுடன் நடவடிக்கை தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் காலத்தை விட பாஜ ஆட்சியில் கைதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது வருந்தத்தக்கது. எனவே, இரு தரப்பு ஒப்பந்தம் உணர்வுபூர்வமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

The post பாஜ ஆட்சியில்தான் மீனவர்கள் கைது அதிகம்: மதுரை எம்.பி கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Bahia ,Madurai ,Union Minister ,Sri Lankan Navy ,EU GOVERNMENT ,Venkatesan ,Bajaj ,Union ,minister ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளாக பேசவிடாமல் தடுத்தனர்...