×

பா.ஜ எம்பி மீது நடவடிக்கை எடுக்க தாமதம் பதக்கங்களை கங்கையில் வீசி எறிய திரண்ட மல்யுத்த வீராங்கனைகள்: ஒன்றிய அரசுக்கு 5 நாள் கெடு

ஹரித்வார்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கங்கையில் தங்கள் பதக்கங்களை வீசி எறிவதாக மல்யுத்த வீராங்கனைகள் ஹரித்வார் கங்கை கரைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அவர்கள் 5 நாள் கெடு விதித்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரான பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங், மைனர் பெண் உட்பட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, பிரிஜ் பூஷணை கைது செய்யக் கோரி, ஒலிம்பிக்சில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கினர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே, பிரிஜ் பூஷண் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது, வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி தடையை மீறி பேரணி சென்றனர்.

ஆனால், அவர்களை டெல்லி போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி நடுரோட்டிலேயே தரதரவென இழுத்து சென்ற விவகாரம் தேசிய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதோடு, ஜந்தர் மந்தரில் போராட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டு, அங்கு போராட அனுமதியும் மறுக்கப்பட்டது. இதனால், இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை போராட்டம் நடத்துவதாக நேற்று அறிவித்த மல்யுத்த வீரர்கள், தாங்கள் வாங்கிய ஒலிம்பிக் உள்ளிட்ட பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்து நேற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதுதொடர்பாக சாக்சி மாலிக் தனது டிவிட்டரில், ‘‘மல்யுத்தப் போட்டிகளில் நாட்டிற்காக பங்கேற்று நாங்கள் வென்ற பதக்கங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் எங்கள் பதக்கங்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமோ அல்லது பிரதமர் மோடியிடமோ ஒப்படைக்கலாம் என்றால், அவர்கள் இருவருமே நாங்கள் போராடிய இடத்திற்கு அருகில் இருந்தும் செவி சாய்க்கவில்லை. நாங்கள் பதக்கம் பெற்று நாடு திரும்பியபோது பிரதமர் மோடி எங்களை தனது வீட்டின் மகள்கள் என்றார். ஆனால், ஒருமுறைகூட அவர் தனது வீட்டு மகள்களை எண்ணிப் பார்க்கவில்லை. மாறாக, எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டார். இது எங்கள் மனத்தை வாட்டுகிறது.

இந்தியாவின் மகள்களுக்கான இடம் எங்கே? எல்லாம் வெறும் கோஷம்தானா? எனவே, நாங்கள் எங்கள் பதக்கங்களை கங்கை நதியில் சமர்ப்பிக்க உள்ளோம். இந்த பதக்கங்கள் தான் எங்கள் உயிர், ஆன்மா. அவற்றை கங்கையில் கரைத்து விட்டு வாழ்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை. எனவே சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக ஹரித்வார் சென்றனர். உடனடியாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்த பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய தலைவர் நரேஷ் திகைத் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர்கள் மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, ஒன்றிய அரசுக்கு 5 நாள் கெடு விதிப்பதாகவும், அதற்குள் பிரஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கத்தை கங்கையில் வீசுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தேசிய அரசியலில் பாஜ அரசுக்கு புதிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.

* நாடு தழுவிய போராட்டம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய சம்யுக்தா கிசான் மோச்சா விவசாயிகள் அமைப்பு, மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசும் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி இந்தியா கேட் பகுதியிலும் போராட போலீசார் அனுமதிக்காததால், புதிய போராட்ட களத்தை மல்யுத்த வீரர்கள் தேர்வு செய்ததும் திரிணாமுல் எம்பிக்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என உறுதி அளித்துள்ளது.

The post பா.ஜ எம்பி மீது நடவடிக்கை எடுக்க தாமதம் பதக்கங்களை கங்கையில் வீசி எறிய திரண்ட மல்யுத்த வீராங்கனைகள்: ஒன்றிய அரசுக்கு 5 நாள் கெடு appeared first on Dinakaran.

Tags : Pa ,Haridwar ,Baja ,Brij Bhushan Saran Singh ,president ,Wrestling Commission of India ,Ganges ,Dinakaran ,
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...