×

பாஜவை வீழ்த்த முரண்பாடுகளை களைந்து ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர வேண்டும்: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பாஜவை வீழ்த்த முரண்பாடுகளை களைந்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்று சென்னையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஜூன் 3ம் தேதி தொடங்கியது. திமுக மற்றும் தமிழக அரசு சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி கடந்த 2ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா லட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.

கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதைத்தொடர்ந்து 3ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்று பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 2ம் தேதி இரவு ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 3ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் 7ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி வடசென்னை, புளியந்தோப்பு பின்னி மைதானத்தில் நேற்று பிரமாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் இந்து அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு வரவேற்று பேசினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பொதுக்கூட் டம் தொடங்கியதும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ என்ற தொகுப்பு நூலை தி.க.தலைவர் கி.வீரமணி வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஓராண்டு முழுவதும் கலைஞர் பிறந்தநாளை, அவருடைய நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். இந்த கொண்டாட்டங்களின் மூலமாக கலைஞருக்கு இதுவரை கிடைக்காத புதிய புகழை சேர்க்கப்போகிறோம் என்பதல்ல, நாம் நம் நன்றியின் அடையாளமாக கொண்டாடி கொண்டிருக்கிறோம். அனைத்து தொழில்களும் சிறக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும். மாநிலத்தின் வளம் என்பது மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியால் தெரிய வேண்டும். இது தான் திராவிட மாடல் வளர்ச்சி. இது தான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக வளர்க்க போகிறது.

கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாட்டில் கலைஞர் கால்படாத இடம் இல்லை. சந்திக்காத மனிதர்கள் இல்லை. நூற்றாண்டு விழாக்களின் ஒரு பகுதியாகத் தான் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படக் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறோம். ஆகஸ்ட் 7ம்தேதி அன்று சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது.

இதற்கிடையே தான் ஜனநாயக போர்க்களமான, நாடாளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்திருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது, யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிப்பதை விட யார் ஆட்சி அமைந்து விடக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்துக்கு நடக்கக்கூடிய தேர்தல் சடங்கு அல்ல. 2024 நாடாளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயக அமைப்பு முறையை காப்பாற்றுவதற்காக, இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பாஜவுக்கு எதிராக இருக்கக்கூடிய ஜனநாயக சக்திகளை தங்களுக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை, மாறுபாடுகளை மறந்து இந்தியாவை காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.

அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு இந்த கூட்டத்துக்கு நான் காரில் வந்து கொண்டிருந்த போது, பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘வரும் 23ம்தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பீகார் மாநிலத்துக்கு வர வேண்டும். அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர அந்த கூட்டம் நடைபெற உள்ளது’ என்றார். இங்கே பேசிய தலைவர்கள் எல்லாம் சொன்னார்கள், தமிழ்நாட்டில் எப்படி ஒரு ஜனநாயக ஆட்சி உருவாவதற்கு ஒரு கூட்டணியை அமைத்தோமோ, அதேபோன்று இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு ஒரு கூட்டணி அமைந்திட வேண்டும் என்று இன்றல்ல, தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

என்னை சந்திக்கக்கூடிய அகில இந்திய தலைவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். மாநில கட்சி தலைவர்கள், முதல்வர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மதவாத, பாசிசவாத, ஏதேச்சதிகார பாஜவை வீழ்த்துவதற்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் அகில இந்திய முழுமைக்கும் ஒன்று சேர வேண்டுமே தவிர, தேவையற்ற முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்துவிடக்கூடாது. பிரிவினைகளால் பாஜக வெல்லப் பார்க்கும். சாதியால், மதத்தால் பிரிவினையை விதைக்கும் அந்த கட்சி அரசியல் கட்சிகளின் முரண்பாடுகள் மூலம் வெல்லப் பார்க்கும்.

அதற்கு, அகில இந்திய தலைவர்கள், மாநில கட்சி தலைவர்கள், முதல்வர்கள் யாரும் இறையாகிவிடக் கூடாது. எத்தகைய பொய்யையும் சொல்வதற்கு பாஜவினர் தயங்க மாட்டார்கள். அவதூறுகளை அள்ளி வீசவும், அதை பரப்பவும், பாஜவிடம் ஏவலுக்கு சிந்தனையற்ற பொறுப்பற்ற ஒரு கூட்டம் அவர்களிடம் இருக்கிறது. அதற்கு தமிழ்நாட்டில் கவர்னராக இருக்கக்கூடியவர் செய்து கொண்டிருக்கக்கூடிய சித்து விளையாட்டுகளை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் இன்று நாங்கள் கிளம்பியிருக்கிறோம்.

எதை வேண்டுமானாலும் பேசட்டும் கவலையில்லை. மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். ஒற்றுமையின் மீது, சகோதரத்துவம் மீது, உண்மையான வளர்ச்சி மீது, இந்த நாட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். கலைஞர் அடிக்கடி சொல்வார்கள். ‘நீ.. நான்.. என்று சொன்னால் உதடு ஒட்டாது. நாம் .. என்றால் தான் உதடுகள் ஒட்டும்’ என்பார்.

அவரது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களோடு, இந்திய ஜனநாயக திருவிழாவையும் நாம் கொண்டாடக்கூடிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நமக்காக அல்ல. நாட்டிற்காக.., ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நடைபெற உள்ள தேர்தல் என்பதை மனதில் வைத்து இநத விழாவில் உறுதி எடுப்போம். சபதம் எடுப்போம். அதுதான் கலைஞருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்கும். பெருமை சேர்க்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post பாஜவை வீழ்த்த முரண்பாடுகளை களைந்து ஜனநாயக சக்திகள் ஒன்றுசேர வேண்டும்: கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Democratic forces ,BJP ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Democratic ,M.K.Stal ,
× RELATED தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்