×
Saravana Stores

பாஜ தூண்டுதலால் அனுப்பிய சம்மனுக்கு கடும் எதிர்ப்பு சேலம் விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற அமலாக்கத்துறை முடிவு: அடிபணியும் அதிகாரிகள்

சேலம்: சேலத்தை சேர்ந்த ஏழை விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏழை விவசாயிகளான அண்ணன்-தம்பிகள் மீது கருப்பு பணம் வைத்திருப்பதாகவும், இதற்கு விளக்கம் கேட்டு சாதி பெயரில் அவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன்பாளையம் காராமணிதிட்டு பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன்(60), கிருஷ்ணன்(55). இவர்களுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளனர். இதற்காக விவசாயிகளுக்கு குணசேகரன் குத்தகை பணத்தை கொடுத்துள்ளார். மேலும், அவர்களுக்கு வட்டிக்கும் குணசேகரன் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 1991ம் ஆண்டு, இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. பணத்தை திருப்பி கொடுக்காததால், நிலத்தை சொந்தமாக வழங்குமாறு குணசேகரன் கேட்டு வந்துள்ளார். தற்போது அந்த நிலத்தின் குத்தகை உரிமை தொடர்பான வழக்கு, ஆத்தூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை மாதம் 5ம் தேதி, சென்னையில் உள்ள அமலாக்கத்துறையில் இருந்து கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோருக்கு சம்மன் ஒன்று வந்துள்ளது. அதில் சகோதரர்களான அவர்கள் கருப்பு பணம் பயன்படுத்தி வருவதாக எழுந்த புகாரின் பேரில், விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, இருவரும் நேரில் சென்று விளக்கம் கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையில் பாஜ நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது என்ற தகவலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த சம்மனில் விவசாயிகள் பெயருடன் ஜாதியையும் இணைத்து எழுதி அனுப்பியது மேலும் சர்ச்சையை உருவாக்கியது.

இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இதனை கண்டித்து சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் கருப்பு பணம் குறித்து விவசாயிகளிடம் விசாரிக்கவில்லை. அரிதான வனவிலங்குகளை வேட்டையாடி கொன்றதாக விவசாயிகள் மீது புகார் வந்தது. அதற்கு விளக்கம் கேட்கவே அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நிலமோசடி புகார் குறித்தும் விசாரிக்கவில்லை என்று அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் வனத்துறை தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத் துறை எப்படி தலையிட முடியும் என்ற கேள்வியும் பரவலானது.

இப்படி பல்வேறு குளறுபடிகள் நிறைந்த இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மீதான கடும் கண்டனம் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் மீதான வழக்கை கைவிட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘‘வழக்கை திரும்ப பெறுவது என்பது அமலாக்கத்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதே நேரத்தில் அவர்கள் அனுப்பிய சம்மனில் இந்து பள்ளர் என்று ஜாதி பெயரை கூறியுள்ளது மிகப்பெரிய தவறு. இது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரமும் அதில் இல்லை. இது தொடர்பாக மனுதாரர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகவாய்ப்புள்ளது,’’ என்றனர்.

The post பாஜ தூண்டுதலால் அனுப்பிய சம்மனுக்கு கடும் எதிர்ப்பு சேலம் விவசாயிகள் மீதான வழக்கை வாபஸ் பெற அமலாக்கத்துறை முடிவு: அடிபணியும் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Enforcement department ,Salem ,Ankit Tiwari ,Dindigul government ,doctor ,Suresh Babu ,
× RELATED அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு...