×

2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜவின் முடிவு ஆரம்பமாகி விட்டது: கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் கருத்து

டெல்லி: மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான ஆணையை வழங்கிய கர்நாடகா மக்களுக்கு எனது வணக்கங்கள். மூர்க்கத்தனமான சர்வாதிகார, ஆதிக்க அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றி பெற வேண்டும் என்று நாடு விரும்பும் போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு அதிகார மையத்தாலும் அதை தன்னிச்சையாக அடக்க முடியாது. இதுதான் கர்நாடகா தேர்தல் முடிவு சொல்லும் நீதி, நாளைய பாடமும் கூட. பாஜவின் ஆணவம், சகிப்பின்மைக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். கர்நாடகாவைத் தொடர்ந்து அடுத்ததாக சட்டீஸ்கரிலும், மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜ மண்ணை கவ்வும். 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜவின் முடிவு ஆரம்பமாகி விட்டது. பிரியங்கா காந்தி (காங். பொதுச் செயலாளர்): காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தந்த கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததன் வெற்றி. தேசத்தை ஒருங்கிணைக்கும் அரசியலுக்கு கிடைத்த வெற்றி. கர்நாடக மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயல்படும். 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 மாதாந்திர உதவி தொகை உள்ளிட்ட காங்கிரசின் 5 வாக்குறுதிகளை ஆட்சி அமைத்ததும் நிறைவேற்ற வேண்டும்.

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி தலைவர்): பாஜவின் எதிர்மறை, வகுப்புவாத, ஊழல், பணக்காரர்களுக்கு ஆதரவான, பெண்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, சமூகத்தை பிளவுபடுத்தும் பிரசாரம், தனிநபர் மைய அரசியலுக்கு எதிரான முடிவு தொடங்கிவிட்டது என்ற செய்தி கர்நாடகாவிலிருந்து வந்திருக்கிறது. இது பணவீக்கம், வேலையின்மை, ஊழல் மற்றும் காழ்ப்புணர்ச்சிக்கு எதிரான புதிய நேர்மறை இந்தியாவின் கண்டிப்பான ஆணை.
மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி): கர்நாடகாவில் இருந்து இன்று நம்பிக்கையின் ஒளிக்கதிர் உதயமாகி உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால் இது ஒரு நல்ல செய்தி. நாடு முழுவதும் உள்ள மக்களும் வகுப்புவாத அரசியலை நிராகரிப்பார்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சஞ்சய் ராவத் (சிவசேனா உத்தவ் அணி தலைவர்): கர்நாடகாவில் பஜ்ரங் பலி தந்திரம் பாஜவின் தலையிலேயே பெரும் இடியாக விழுந்துள்ளது. இது பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கிடைத்த தோல்வி. கர்நாடகாவில் இன்று என்ன நடந்ததோ அதுவே 2024 மக்களவைத் தேர்தலில் நடக்கப் போகிறது.

ப.சிதம்பரம் (காங்கிரஸ் மூத்த தலைவர்): தீர்க்கமான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள். இந்த தேர்தல் வெறும் ஒரு மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் மட்டுமல்ல, அதையும் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடக மக்கள் பாஜவின் இரட்டை இன்ஜின் அரசின் பணபலத்தையும் அதிகார பலத்தையும் வீழ்த்தி, நாட்டின் பிற பகுதிகளுக்கு சிறந்த வழியைக் காட்டியுள்ளனர். கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்): பாஜ கட்சி ஆட்சியில் இருக்கும் போது தங்களின் வேலையை செய்ய மாட்டார்கள். ஆனால் பிரசாரத்தில் குப்பையான பிரச்னைகளை கிளறி வெற்றி பெற முயற்சிப்பார்கள். இனியும் இதுபோன்ற தந்திரங்கள் பலிக்காது என்பதை பாஜ உணர வேண்டும். பூபேஷ் பாகேல் (சட்டீஸ்கர் முதல்வர்): தேர்தலை திசை திருப்பும் பாஜவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. கர்நாடகாவில் பாஜவின் தோல்வி பிரதமர் மோடியின் செயல்திறனுக்கான தோல்வி. முழு தேர்தலையும் அவர் தன்னையே மையப்படுத்தி பிரசாரம் செய்தார்.

அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதல்வர்): கர்நாடகா வகுப்புவாத அரசியலை விட வளர்ச்சி அரசியலை தேர்ந்தெடுத்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மீண்டும் இது நிகழும்.
சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் தலைவர்): கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பிறகான சூழ்நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மக்களவை தேர்தலிலும் பாஜவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். ராகுல் காந்தியின் யாத்திரை காங்கிரசுக்கு வெற்றி பெற உதவியது.

உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி தலைவர்): கர்நாடகாவில் தோல்வி அடைந்துள்ளதால், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் தைரியம் பாஜவுக்கு இப்போது இருக்காது. பினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட் எம்பி): ஏழைகளுக்கு ஆதரவான வாக்குறுதிகளும், மதச்சார்பற்ற நிலைப்பாடும், வரலாற்றுச் சிறப்புமிக்க கர்நாடகா வெற்றியைப் பெற காங்கிரஸுக்கு உதவியது. மோடி ஒருபோதும் வெல்ல முடியாதவர் அல்ல. அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட்டால், 2024ல் பாஜ ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். பிஆர்எஸ் கட்சி : அசிங்கமான, பிரித்தாளும் அரசியலை புறக்கணித்த கர்நாடகா மக்களுக்கு நன்றி. கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரசுக்கு வாழ்த்துக்கள். எப்படி ‘தி கேரளா ஸ்டோரி’ கர்நாடகா மக்களை மகிழ்விக்க தவறியதோ, அதே போல, கர்நாடகாவின் தேர்தல் முடிவு தெலங்கானாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

The post 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜவின் முடிவு ஆரம்பமாகி விட்டது: கர்நாடகா தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Baja ,2024 elections ,Karnataka ,Delhi ,Mamta Panerjie ,West Bengal ,
× RELATED 140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்