×

டிவிட்டரில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வன்முறை தூண்டியதாக பாஜ மாநில நிர்வாகி கைது

கோவை: டிவிட்டரில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வன்முறை தூண்டியதாக பாஜ மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டார். கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (48). இவர் தமிழ்நாடு பாஜ மாநில தொழில்துறை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவு செய்து வந்தார். இவரின் கருத்துக்களை குறிப்பிட்டு மேலும் சிலர் அவதூறு பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இதுகுறித்து கோவை கணபதி புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறு கருத்து வெளியிடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து செல்வகுமாரை நேற்று கைது செய்தனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த 2022ல் சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்ததாக செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்கள் இரு பிரிவுகள் இடையே வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதால் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post டிவிட்டரில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வன்முறை தூண்டியதாக பாஜ மாநில நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Twitter ,Coimbatore ,Kalapatti, Coimbatore ,Dinakaran ,
× RELATED அக்னிபாதை திட்டத்தை திணித்து...