×

சமூக வலைதளங்களை பயன்படுத்தி விற்பனை; காற்றாடி விற்க மூளையாக செயல்பட்ட பெங்களூரு வியாபாரிகள் அதிரடி கைது.!6500 காற்றாடி, 200 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல்

மாதவரம்: காற்றாடி விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட பெங்களூரு வியாபாரிகள் 3 பேரை தனிப்படை போலீசார் தட்டி தூக்கினர். சமூக வலைதளங்களை பயன்படுத்தி அவர்கள் சென்னையில் காற்றாடி விற்பனையில் ஈடுபட்டது அம்பலத்திற்கு வந்தது. மொத்தம் 6500 காற்றாடி, 200 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாநகர கமிஷனர் அருண் உத்தரவின்படி, போலீசார் காற்றாடி விவகாரத்தில் ஆணி வேரை பிடுங்கி உள்ளனர்.
ஒரு காலத்தில் பொழுதுபோக்காக இருந்த காற்றாடி அதன் பின்பு மனிதர்களின் உயிரை பறிக்கும் எமனாக மாறியது. மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட்டதால் சென்னையில் சிறு குழந்தை முதல் பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இதனால் கடந்த 2016ம் ஆண்டு மாஞ்சா நூலுக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடர்ந்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அதன் பிறகு சென்னையில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விடும் சம்பவங்கள் படிப்படியாக குறைந்து வந்தன.

இருப்பினும் அவ்வப்போது சில விபத்துகள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாசர்பாடி மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது தந்தையுடன் வந்த இரண்டரை வயது குழந்தை மற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த ஜிலானி பாஷா ஆகிய இருவர் மாஞ்சா நூல் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வியாசர்பாடி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து போலீசார் சுமார் 25க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும் ஒவ்வொருவரையும் கைது செய்யும் போது அவர்கள் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றின் வழியாக ஆன்லைனில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து அதனை கூரியர் மூலம் பெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இவர்களுக்கு எங்கிருந்து மொத்தமாக காற்றாடி வருகிறது என்பதை கண்டறிய தொடங்கினர்.

ஓட்டேரி பகுதியில் காற்றாடி விற்பனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த சிலருடன் தொடர்ந்து காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து காற்றாடி மாஞ்சா நூல் விவகாரத்தில் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து கைது செய்யுமாறு சென்னை மாநகர கமிஷனர் அருண் உத்தரவிட்டிருந்தார். எனவே, புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில் காற்றாடி மொத்த வியாபாரிகளை கைது செய்ய புளியந்தோப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் காற்றாடி விற்பவர்களை கண்காணித்தனர். அப்போது அயப்பாக்கம் ஆஞ்சநேயர் நகர் பகுதியைச் சேர்ந்த முகமது பாசில் (25) என்பவர் பெங்களூருவில் இருந்து காற்றாடிகளை வாங்கி அதனை சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விற்று வருவது தெரிய வந்தது.

இருப்பினும் போலீசார் அடுத்தடுத்து காற்றாடி விற்பவர்களை கைது செய்த நிலையில் முகமது பாசில் தனது சமூக வலைத்தளங்கள் அனைத்தையும் முடக்கிவிட்டு இன்ஸ்டாகிராமில் இனி யாரும் காற்றாடி சம்பந்தமாக என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என கூறிவிட்டு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு பெங்களூருக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு விரைந்த போலீசார் முகமது பாசிலை அவரது உறவினரான பெங்களூரு விவேக் நகர் பஜார் தெரு பகுதியில் உள்ள மன்சூர் (37) என்பவர் வீட்டில் வைத்து பிடித்தனர். அப்போது மன்சூர் வீட்டை சோதனை செய்த போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது மண்சூரும் பெங்களூருவில் கள்ளத்தனமாக காற்றாடி விற்பனையில் ஈடுபடுவதும் சமூக வலைதளங்கள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கூரியர் மூலம் காற்றாடிகளை அவர் அனுப்பி வைப்பதும் தெரிய வந்தது. அவரது வீட்டில் இருந்து 6500 காற்றாடிகள் 200க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் லோட்டாய்கள், ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள காற்றாடி செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மன்சூர் மற்றும் அவரது உறவினர் முகமது பாசில் ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு சம்பந்தம் நகர் பகுதியை சேர்ந்த இம்ரான் (33) என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி காற்றாடி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் மன்சூர் பெங்களூரு சிவாஜி நகர் பகுதியில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை மொத்தமாக விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருவதும், இவர் அமேசான், பிளிப்காட் மூலமாக ஆர்டர்களை பெற்று எம்டி கிட்டீஸ் என்ற பெயரில் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதேபோல இவரது உறவினரான முகமது பாசில் சென்னையில் தங்கியிருந்து மன்சூரிடமிருந்து மொத்தமாக காற்றாடி மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி விற்பனை செய்து வந்ததும் இவர் எப்பி கிட்டீஸ் என்ற பெயரில் முகநூலில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொரு நபரான இம்ரான் என்பவர் பெங்களூரு சிவாஜி நகரில் காற்றாடி மொத்த வியாபாரம் செய்து வந்ததும் இவர் கூரியர் மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் விற்பனை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து, மூன்று பேரையும் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களை வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வர தனியாக லாரி ஒன்றை பேசி அதன் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 6500 காற்றாடிகள், 200க்கும் மேற்பட்ட மஞ்சா நூல் லோட்டாய்கள் மற்றும் காற்றாடி மற்றும் மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் காற்றாடி விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட மூன்று பேரை சென்னை போலீசார் பெங்களூருக்கு சென்று தட்டி தூக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடம் சில தகவல்களை பெற்று அதனை வைத்து தொடர் விசாரணையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சமூக வலைதளங்களை பயன்படுத்தி விற்பனை; காற்றாடி விற்க மூளையாக செயல்பட்ட பெங்களூரு வியாபாரிகள் அதிரடி கைது.!6500 காற்றாடி, 200 மாஞ்சா நூல் உருண்டைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Chennai ,Dinakaran ,
× RELATED மனைவி, மாமியாரின் துன்புறுத்தலுக்கு...