×

வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பு 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: ‘‘குமரிக் கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி நீடித்து வருவதால் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்’’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், கடந்த அக்டோபர் மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கியது. அக்டோபர் 20ம் தேதி முதல் நேற்று வரை இந்த பருவத்தில் இயல்பாக 30 சதவீதம் மழை பெய்ய வேண்டும். ஆனால் 25 சதவீதம் வரை மட்டும் தான் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 16 சதவீதம் குறைவு.

இந்நிலையில் குமரிக்கடல் பகுதி மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளி மண்டல காற்று சுழற்சி நீடித்து வருகிறது. அதனால், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக குலசேகரப்பட்டிணத்தில் 160மிமீ மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளம் 120மிமீ, திருச்செந்தூர் 110 மிமீ, காயல்பட்டினம் 90மிமீ, காக்காச்சி, ஸ்ரீவைகுண்டம் 40மிமீ மழை பெய்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், பொன்னேரி, பூந்தமல்லி, போரூர், தாம்பரம், வளசரவாக்கம், வட சென்னை, மயிலாப்பூர், அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் 10மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 30 நாளில் இயல்பான அளவுக்கு பெய்ய வேண்டிய மழை 16 சதவீதம் குறைவாக பெய்துள்ள நிலையில், இனி வரும் மாதங்களில் ஏற்படும் காற்று நிலையின் வகைகளை பொருத்து மழையின் அளவு கணிக்கப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தலா 1 வளி மண்டல காற்று சுழற்சி கடந்த இரண்டு நாட்களாக நீடித்து வருகிறது. அதன் காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 26ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பு 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Meteorological Department ,Chennai ,Kumarik Sea ,Tamil Nadu ,
× RELATED வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு