×

மாற்றுத்திறனாளி, வயதான பக்தர்கள் வசதிக்காக திருத்தணி மலைக்கோயிலுக்கு ரூ6 லட்சத்தில் பேட்டரி கார்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலைக்கோயிலுக்கு செல்லும் நுழைவுவாயில் வரை மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் நடந்து செல்வதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் கோயில் நிர்வாகம் சார்பில், பேட்டரி கார் வாங்கி பக்தர்களை மலைக்கோயிலுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், திருத்தணி இந்தியன் வங்கி கிளை சார்பில், 6 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வாங்கி கோயிலுக்கு ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் பூந்தமல்லி மண்டல மேலாளர் சுசிலா பார்த்தசாரதி, திருத்தணி இந்தியன் வங்கி மேலாளர் வினிநாராயணன்குட்டி, வங்கி அலுவலர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் பங்கேற்று, கோயில் துணை ஆணையர் விஜயாவிடம் பேட்டரி காரை வழங்கினர்.

இதையடுத்து அமைச்சர்கள் காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் பேட்டரி காரை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், கூடுதல் ஆணையர் திருமகள், முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷாராணி, மோகனன், சுரேஷ்பாபு, மு.நாகன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, நகர செயலாளர் வினோத்குமார், நகர்மன்ற துணைத் தலைவர் ஆ.சாமிராஜ், துணை ஆணையர் விஜயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக திருத்தணி கோட்ட ஆறுமுகசுவாமி கோயில் வளாகத்தில் இறந்த வள்ளியானைக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டுவதற்கு நேற்று மாலை பூமி பூஜை நடத்தப்பட்டது.

இதன்பிறகு புனரமைக்கப்பட்ட தணிகை இல்லம் குடில்கள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தெக்களூர் பகுதியில் கோயிலுக்கு சொந்தமான நீரேற்று நிலையத்தில், 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. மலைப்படிகளில் 3 இடங்களில் நிழல் மண்டபங்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. மலைக்கோயிலில் அன்னதான கூடத்தில் உணவு தயாரிக்கும் நவீன நீராவி அடுப்பு மற்றும் நவீன குக்கர் ஆகியவற்றை துவக்கி வைத்தனர்.

The post மாற்றுத்திறனாளி, வயதான பக்தர்கள் வசதிக்காக திருத்தணி மலைக்கோயிலுக்கு ரூ6 லட்சத்தில் பேட்டரி கார் appeared first on Dinakaran.

Tags : Tiruthani hill temple ,Thiruthani ,Thiruthani Murugan Temple ,Thiruthani hill temple ,
× RELATED திருத்தணி முருகன் கோயில் ரூ.1.79 கோடி காணிக்கை