×

செல்போனை பறித்துக்கொண்டு சரமாரி தாக்குதல் வீச்சரிவாளுடன் துரத்தியதால் போலீசில் தஞ்சமடைந்த விஏஓ: மண் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்

ஓமலூர்: ஓமலூர் அருகே மண் கடத்திய வாகனத்தை பிடித்த கிராம நிர்வாக அலுவலரை தடுத்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர், செல்போனை பறித்துக்கொண்டு வீச்சரிவாளுடன் விரட்டியதால் விஏஓ காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தாரமங்கலம் ஒன்றியம், மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் தாரமங்கலம் பொத்தியாம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (32). கடந்த 18ம் தேதி, மானத்தாள் கிராமம் தாண்டவனூர் பகுதியில் மண் கடத்தலை தடுத்து , டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தை பிடித்து கனிமவளத்துறையிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, கனிமவளத்துறை அதிகாரி பிரசாந்த், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் வாகனங்களை ஒப்படைத்து புகார் அளித்தார். அதன்பேரில் சித்துராஜ், விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை விஏஓ வினோத்குமார் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றபோது, சித்துராஜ் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

அவரது செல்போனை பறித்து கொண்டார். வீச்சரிவாளை எடுத்து வெட்ட முயலவே விஏஓ வினோத்குமார் பைக்கில் தப்பி, தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசாரிடம் விபரத்தை கூறி, தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். தன்னை கொலை செய்ய முயன்ற சித்துராஜை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தார். தகவலறிந்த ஓமலூர் தாலுகாவில் விஏஓக்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். சித்துராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து, சித்துராஜ் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல், கையால் தாக்குதல், வழிப்பறி செய்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

The post செல்போனை பறித்துக்கொண்டு சரமாரி தாக்குதல் வீச்சரிவாளுடன் துரத்தியதால் போலீசில் தஞ்சமடைந்த விஏஓ: மண் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம் appeared first on Dinakaran.

Tags : VAO ,Omalur ,Dinakaran ,
× RELATED ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வீஏஓ...