×

வங்கிகளில் வரும் 23ம் தேதி முதல் ₹2000 நோட்டு மாற்ற சிறப்பு கவுன்டர்கள்: வயதானோர் கியூவில் நிற்பதை தடுக்க பிரத்யேக ஏற்பாடு

சென்னை: வரும் 23ம் தேதி முதல், வங்கிகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்ற சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் வயதானோர் கியூவில் நிற்பதை தடுக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. அதாவது, ரூ.2000 நோட்டுக்களை வைத்துள்ளவர்கள் வருகிற 23ம் தேதி முதல் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து நேற்று முதலே வங்கிகளை வாடிக்கையாளர்கள் அணுக தொடங்கினர். இந்த நிலையில் வரும் 23ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள், வணிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘இன்று வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. நாளை திங்கட்கிழமை வங்கி கிளைகள் செயல்படும். அப்போது வங்கி ஊழியர்களிடம் ஆலோசித்து பணத்தை மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கலந்தாலோசிக்க உள்ளோம். கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் வங்கி கிளைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற சிறப்பு கவுன்டர்கள் உருவாக்கப்படும். அதே நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வங்கிகளுக்கு வரும் வகையில் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்யப்படும். கூட்டம் அதிகமானால் சாமியானா பந்தலும் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அதே நேரத்தில் வயதானவர்கள் எளிதாக பணத்தை மாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். ஒருவர் ஒரே நேரத்தில் பத்து 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் போது, அவர்களுக்கு பணம் வழங்குவதற்காக கூடுதலாக பணத்தை வங்கிகளில் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வங்கிகளில் வரும் 23ம் தேதி முதல் ₹2000 நோட்டு மாற்ற சிறப்பு கவுன்டர்கள்: வயதானோர் கியூவில் நிற்பதை தடுக்க பிரத்யேக ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை