×

தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: தேர்தல் பிரசாரத்தில் எந்த விதத்திலும் குழந்தைகளை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையல், தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், ‘அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரத்தில் குழந்தைகளை கையில் ஏந்துதல், வாகனத்தில் அழைத்துச் செல்லுதல், பேரணியில் பங்கேற்க வைத்தல் என எந்த விதமான பிரசார நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது.

கவிதை, பாடல், பேசும் வார்த்தைகள் என எந்த வகையிலும் அரசியல் பிரசாரத்தின் சாயலை உருவாக்கவோ, கட்சி அல்லது வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்தவோ குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது. இதே போல மற்றொரு அறிக்கையில், தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டுமெனவும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

The post தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Lok Sabha ,
× RELATED விஜய் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம்