×

12 ஏக்கரில் வாழை…ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம்…

கதலி வாழை 12 ஏக்கரில் சாகுபடி செய்து ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருவதோடு, 2 லட்சம் வாழைகளை குத்தகைக்கு எடுத்து அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.17 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார் தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூரைச் சேர்ந்த விவசாயி அம்சராஜா. ஒரு நாள் நண்பகல் வேளையில் வாழைத்தார் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அம்சராஜாவை அவரது தோட்டத்தில் சந்தித்து வாழை விவசாயம் குறித்தும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்தும் ேபசினோம்.

மேலஆத்தூரில் 12 ஏக்கரில் வாழை சாகுபடி:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மேலஆத்தூரில் 12 ஏக்கரில் கதலி வாழை சாகுபடி செய்து வருகிறேன். எனது தாத்தா காலத்தில் தொடங்கி, எனது அப்பா, தற்போது நான் என தொடர்ந்து என் குடும்பத்தினர் வாழை விவசாயம் செய்து வருகிறோம். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் எங்களைப் போல் பல குடும்பத்தினரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது இந்த வாழை விவசாயம். பாபநாசம் அணையில் இருந்து வைகுண்டம் அணைக்கு வரும் தாமிரபரணி ஆற்றுநீர், அதிலுள்ள தென்கால் மூலம் பிரிந்து ஆத்தூர் பகுதிக்கு வந்து சேர்கிறது. ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாழை, வெற்றிலை உள்ளிட்ட தங்களுடைய விவசாய பணிகளை மேற்கொள்ள தாமிரபரணி ஆற்று நீரானது பிரதானமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் தாமிரபரணி மூலம் தண்ணீர் கிடைப்பதால் தண்ணீர் பிரச்னை எதுவும் எங்களுக்கு இல்லை.

வாழவைக்கும் வாழைக்கு ஜே

ஒரு ஏக்கருக்கு ஆயிரம் வாழைகள் வீதம் 12 ஏக்கரில் 12 ஆயிரம் வாழைகள் நடவு செய்துள்ளேன். நன்கு வளர்ந்த ஒரு வாழையின் அருகே வரும் பக்கக் கன்றுகள் அல்லது ஓரிடத்தில் உள்ள வாழைக் கன்றுகளை பிடுங்கி எடுத்து வந்து நட்டுவைப்போம். வாழைக் கன்றுகளை ஒன்றுக்கொன்று 8 அடி இடைவெளி இருக்கும்படி நடவு செய்து, தினசரி தேவைக்கேற்ப தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 7வது மாதத்தில் வாழைக்குலை வரத் தொடங்கும். அதன்பிறகு 80 முதல் 90 நாளில் வாழைத்தார்களை வெட்டி எடுப்போம். இந்த தாய் வாழையின் அருகே 5 முதல் 8 வரை பக்கக் கன்றுகள் முளைக்கும். இதில் முதலில் வைத்த தாய் வாழை அழுகி இல்லாமல் போகும். அதன் அருகேயுள்ள பக்க கன்றுகளில் நல்ல கன்றினை தேர்வுசெய்து அதே இடத்தில் ஒரு கன்றினை வளர விடுவதோடு, மற்றவற்றை எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் நட்டு வளர்ப்போம். வாழைக்கன்று முளைக்கத் தொடங்கி முதல் 2 மாதத்தில் 5 முதல் 6 இலைகள் வந்தவுடன் முதலில் சாணிஉரம், சாம்பல், பஞ்சு போன்ற இயற்கை முறையிலான உரங்களை பயன்படுத்துவோம். தேவைப்படும்போது டிஏபி, பொட்டாஷ், யூரியா, சூப்பர் போன்ற உரங்களை பயன்படுத்துவோம். இந்த உரங்களை வைத்தபிறகு 7 முதல் 10 நாட்களில் சகதி அள்ளி வாழை மூட்டினைச் சுற்றி போடுவோம். இதையடுத்து இரண்டரை மாதம் கழித்து இதேபோல் உரமிடுவோம். வாழைகள் தரமானதாகவும், பெரியதாகவும் இருப்பதற்காக ஊட்டச்சத்து மருந்துகளை வாழையின் மீது ஸ்பிரே செய்வோம்.

12 ஆயிரம் வாழையில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம்:

மேலஆத்தூரில் உள்ள 12 ஏக்கர் தோட்டத்தில் ஏக்கருக்கு ஆயிரம் வீதம் 12 ஆயிரம் கதலி வாழைகள் பயிர் செய்துள்ளேன். புயல், காற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் வெயில் காலத்தில் தண்டு ஒடிவது போன்ற பல்வேறு காரணங்களால் 2 ஆயிரம் வாழைகள் வரை சேதமடையும். இதில் 10 ஆயிரம் வாழைகள் வரை பிழைக்கும். சீசன் இல்லாதபோது ஒரு வாழைத்தார் குறைந்தது ரூ.80க்கும், நல்ல சீசன் உள்ள நேரங்களில் ஒரு வாழைத்தார் அதிகபட்சம் ரூ.300க்கும் விற்பனை செய்துள்ளோம். பொங்கல், பங்குனிஉத்திரம், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண முகூர்த்த நாள்களில் வாழைத்தார் விற்பனை நன்றாக இருக்கும். சராசரியாக ஒரு வாழைத்தாருக்கு ரூ.200 வீதம் 12 ஏக்கரில் 10 ஆயிரம் வாழைகள் மூலம் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். வாழை சாகுபடியின்போது பட்டம் கொத்துதல், சகதி போடுதல், கன்னு குத்துதல், சருகு அறுப்பது, வாழை வெட்டுவது போன்ற வேலைகளுக்கான வேலையாள்கூலி, வௌியூர்களுக்கு அனுப்பும் வாழைகளை லாரிகளில் ஏற்றி இறக்கும் வேலையாள்கூலி, லாரி வாடகை, உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து ரூ.10 லட்சம் வரை செலவாகும். செலவுகள் கழித்துப்போக ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும். சீசன் மற்றும் இயற்கைச் சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த லாபத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

2 லட்சம் குத்தகை வாழைகள் மூலம் 17 லட்சம் வருமானம்:

12 ஏக்கர் இருந்து கிடைக்கும் கதலி வாழை மற்றும் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள விவசாயிகளிடம் இருந்து குத்தகை முறையில் வாங்கியுள்ள 2 லட்சம் வரையிலான கதலி வாழைகளை தமிழ்நாட்டில் சென்னை, திண்டுக்கல், திண்டிவனம், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, எடப்பாடி போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்கிறேன். 2 லட்சம் வாழைகள் குத்தகைக்கு எடுத்தால் வெயில் காலத்தில் தண்டு ஒடிவது, காற்று காலம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களால் அதில் 30 ஆயிரம் வாழைகள் வரை சேதமாகிறது. இதில் கிடைக்கும் 1 லட்சத்து 70 ஆயிரம் வாழைகளில் இருந்து வாழைத்தார்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறேன். ஒரு லோடு லாரியில் 350 முதல் 400 வாழைத்தார்கள் வரை ஏற்றுவோம். இதில் பெரிய லாரியில் 10 முதல் 12 டன் அளவிலான வாழைத்தார்கள் ஏற்றுவதற்கு கூலி ரூ.12 ஆயிரமும், சிறிய லாரியில் 7 முதல் 8 டன் அளவிலான வாழைத்தார்கள் ஏற்றுவதற்கு கூலி ரூ.7 ஆயிரமும் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் அனைத்து செலவுகளும் கழித்துபோக, ஒரு வாழைத்தாருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை வருமானம் கிடைக்கும். ஒரு வாழைக்கு சராசரியாக ரூ.10 வீதம் 1.70 லட்சம் வாழைகள் மூலம் 17 லட்சம் வருமானம் ஈட்டலாம். சீசனைப் பொறுத்தும், இயற்கை சீற்றங்களைப் பொறுத்தும் குத்தகைக்கு எடுக்கும் வாழையில் வரக்கூடிய வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சில சமயங்களில் இதில் செலவு செய்த பணத்தைக்கூட திரும்ப எடுக்க முடியாத நிலையும் ஏற்படும் என்கிறார் விவசாயி அம்சராஜா.

The post 12 ஏக்கரில் வாழை…ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வருமானம்… appeared first on Dinakaran.

Tags :
× RELATED மற்ற கட்சிகளை உடைப்பதே பாஜகவின் வேலை: டெல்லி அமைச்சர் ஆவேசம்