உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ஆட்டு சந்தை களைகட்டும். இந்நிலையில் வரும் 17ம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வருவதை முன்னிட்டு இன்று அதிகாலை சிறப்பு ஆட்டுச்சந்தை தொடங்கியது. உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகள் இந்த சந்தையில் தங்களது ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையின் போது குர்பானி விருந்து கொடுப்பது வழக்கம்.
அதனால் ஒரு வாரத்திற்கு முன்பே ஆடுகளை வாங்கி அதனை வீட்டில் வளர்த்து பின்னர் பண்டிகையன்று குர்பானி கொடுப்பார்கள். இதனால் இன்று ஆண்டு சந்தையில் ஏராளமான இஸ்லாமியர்கள், ஆடுகளை வாங்கி சென்றனர். ₹10 ஆயிரத்திலிருந்து ரூ.45 ஆயிரம் வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதனால் இன்று ரூ.3 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் மினி டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஆடுகளை வாங்கி சென்றனர். இதனால் வழக்கமாக சந்தை நடைபெறும் இடத்திலிருந்து மாற்றி பெரிய ஏரியில் ஆட்டு சந்தை நடந்தது.
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் நாட்டு ஆடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் கர்நாடகா பண்ணை ஆடுகள் என ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் ஆடுகளின் விலை சற்று குறைவானது. இஸ்லாமியர்கள், வியாபாரிகள் திரளாக வந்து பேரம் பேசி ஆடுகளை வாங்கி சென்றனர்.
குறைந்தது ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.30,000 வரை ஆடுகள் விற்பனையானது. இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. அதிக அளவில் விற்பனைக்காக ஆடுகள் குவிக்கப்பட்டிருந்ததால் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் தெரிவித்தனர்.
The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.