×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூரில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

வேடசந்தூர்: பக்ரீத் பண்டிகையையொட்டி அய்யலூர் ஆட்டு சந்தையில் இன்று சுமார் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுசந்தை திகழ்கிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வருகின்றனர். இவர்கள் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்கி செல்வது வழக்கம். வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று அய்யலூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை வழக்கத்தைவிட களைகட்டியது. அதிகாலை 3 மணி முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் குவிந்ததால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.

வியாபாரிகள் போட்டிபோட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகள் அதிகளவில் விற்பனை ஆனது. திடகாத்திரமான கிடா ஆடுகள் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்பட்டன. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு ரூ.8 ஆயிரம், செம்மறி ஆடு ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டன. நாட்டுக்கோழி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ.3.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதேபோல, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆட்டு சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூரில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ayyalur ,Bakrit festival ,Ayyalur goat market ,Ayyalur, Dindigul district ,Ayyallur Goat Market ,Dindigul district ,Bakrit ,Dinakaran ,
× RELATED வேடசந்தூர் அருகே புரட்டாசியால்...