×
Saravana Stores

பி.இ, பி.டெக் கவுன்சலிங் இன்று தொடக்கம்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: நடப்பாண்டு பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வை உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை நடைபெற்றது. 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில், 65 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர்.

இதைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு ஜூலை 29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அதன்படி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு மட்டும் நேரடி கலந்தாய்வாக இருக்கும். மற்றவர்களுக்கு வழக்கம்போல் இணையவழியில் கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டுப் பிரிவில் 2,112 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,223 பேரும், சிறப்புப் பிரிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் 386 பேரும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்து, ஜூலை 29ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும்.

செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் இந்த இணையவழி கலந்தாய்வில் அகாடமிக், அரசுப் பள்ளி மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் பங்கேற்பர். இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9ம் தேதி வரையும், எஸ்சி-அருந்தியர் பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் எஸ்சி பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11ம் தேதிகளிலும் நடைபெறும். செப்.11ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும். அதைத்தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கும்.

The post பி.இ, பி.டெக் கவுன்சலிங் இன்று தொடக்கம்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : B.E ,B.Tech ,Higher Education ,Minister ,Ponmudi ,CHENNAI ,PE ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசு மற்றும் அரசு உதவி பெறும்...