×

ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம்: பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது, பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 23ம் தேதி ஆயுதபூஜை பண்டிகையும் மறுநாள் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைளுக்கு முன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர்.

மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதன் காரணமாக, பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் நாளை 22ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 2,265 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர், பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 1,700 பேருந்துகளும் இயக்க போக்குவரத்து துறை தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சை, நாகை மற்றும் தென் மாவட்டங்களுக்கும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, திண்டிவனம் பண்ருட்டி, சிதம்பரம் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 1,000 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப சில ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் அனைத்து பேருந்து நிலையங்களிலும் நியமிக்கப்பட்டனர்.

நேற்று ஒரு நாள் பயணிப்பதற்கு மட்டும் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன்பதிவு செய்தனர், அதில் சென்னையில் இருந்து மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பலர் பேருந்து நிலையங்களுக்கு வந்து நேரடியாக டிக்கெட் எடுத்தும் பயணித்தனர். பேருந்து நிலையங்களை போல ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை என்பதால் ரயில்களில் பயணிக்க பலர் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர்.

ரயில்களில் ஒரு வாரத்திற்கு முன்பதிவு இடங்கள் முழுமையாக நிரம்பின. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பகல் நேரங்களில் புறப்படும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் மட்டுமின்றி கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இடங்கள் முழுமையாக நிரம்பியது. வட மாநிலங்களில் தசரா பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படுவதால் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பின. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் காலையில் இருந்தே களை கட்டியது. கோவை, திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் ரயில்களும் நிரம்பி காணப்பட்டன.

எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் உயர்ந்து காணப்பட்டது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் குவிந்ததால் மக்கள் கூட்டம் அலை மோதியது. ரயில் நடைமேடைக்கு வரும் முன்பே பலர் போட்டிப்போட்டு கொண்டு ஓடும் ரயிலில் ஏறி இடம் பிடித்தனர். ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் கடைசியாக செல்வது ஆம்னி பேருந்துகள். ஆனால் பொதுமக்களின் தேவையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளதுள்ளனர்.

தற்போது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இவை தவிர பலரும் தங்கள் சொந்த கார்களில் பயணங்களை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று வரும் நிலையில் போக்குவரத்தை சரி செய்ய சென்னை மற்றும் செங்கல்பட்டு போக்குவரத்து போலீசார் பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக, பேருந்துகள் எளிதில் செல்லவும், வாகன ஓட்டிகளின் கூட்ட நெரிசலை தடுக்கவும் பல்வேறு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை தினத்தையொட்டி பேருந்துகள், ரயில்கள் என ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து 7 முதல் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

* சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
* சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பகல் நேரங்களில் புறப்படும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டது.
* ஆம்னி பேருந்துகளில் தற்போது ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

The post ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக பஸ், ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம்: பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : puja series ,CHENNAI ,Armed Pooja ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!