அண்ணாநகர்: தமிழ் திரைப்படங்களை தனது யூடியூப் சேனலில் ரிவ்யூ செய்பவர் பிரசாந்த். இவர் கடந்த ஜூன் 6ம் தேதி சமூகவலை தளத்தில் சாலையில் ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்றைவெளியிட்டதுடன் இதுபற்றி சென்னை போக்குவரத்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில், ‘’கோயம்பேடு பாலத்தின் கீழே ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி சாய்வதுபோல சென்று, பின்னர் பாலத்தின்மீது ஒருவழிப்பாதையில் செல்கிறது. இதையடுத்து சாலையில் ஆட்டோ சாகசத்தில் ஈடுபட்ட டிரைவரை கண்டுபிடித்து அபராதம் விதிக்கவேண்டும் என்று கோயம்பேடு போக்குவரத்து போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இன்ஸ்பெக்டர் சுந்தரம், உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், சாகசம் செய்த ஆட்டோ நம்பரை வைத்து விசாரித்தபோது சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் ஆட்டோ என்று தெரியவந்தது.
அவரிடம் விசாரணை நடத்தியதில் நண்பர் திருமங்கலம் பாடிபுதூர் பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவரிடம் வாடகைக்கு ஆட்டோ கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த தகவல் அடிப்படையில், ஆட்டோ டிரைவர் முத்துவை பிடித்து விசாரித்தனர். அப்போது முத்து, ‘’பிரதான சாலையில் சாகசம் செய்வதுபோல் ஆட்டோ ஒட்டியது தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள்’’. இனிமேல் சாகசம் செய்ய மாட்டேன்’’ என்று கதறி அழுதுள்ளார். இதையடுத்து முத்துவை போலீசார் கடுமையாக எச்சரித்தனர். அத்துடன் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல், நோ என்டரியில் வாகனத்தை ஓட்டுதல் என 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து 1,500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளனர்.
இதனிடையே, சமூகவலைதள பக்கத்தில் முத்து வெளியிட்டுள்ள வீடியோவில், ‘’திருமங்கலம் பாடிபுதூர் பகுதியில் வசித்து வருகிறேன்.
மனைவி, பிள்ளைகள் உள்ளனர். கடந்த 6ம்தேதி கோயம்பேடு மேம்பாலத்தில ஒரு வழி பாதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்தவாறு ஆட்டோவை ஒட்டிச் சென்று மேம்பாலத்தில் கீழே இறங்கி சாலையில் செல்லும்போது ஒற்றை சக்கரத்தை ஒரு பக்கம் தூக்கிய படி சாகத்தில் ஈடுபட்டேன். என்னை எல்லாரும் கவனித்ததால் கெத்தாக இருந்தது. தற்போதுதான் செய்தது தவறு என்பதை உணர்கிறேன். இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டேன்’ என்று பேசியுள்ளார்.
The post யூ டியூபர் கொடுத்த புகாரில் சிக்கினார்; சாலையில் ஆட்டோவில் சாகசம்: டிரைவருக்கு எச்சரிக்கை, அபராதம்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டார் appeared first on Dinakaran.