×

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: சட்டம், செய்தி, வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

சென்னை: 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது. சட்டம், செய்தி, வணிகவரித்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது. தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த மாதம் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 21ம் தேதி வேளாண்மை துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 23, 24, 27, 28ம் தேதி ஆகிய 4 நாட்கள் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. மார்ச் 29ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதி தொழில் வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். 7ம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை, 8ம் தேதி சனிக்கிழமை, 9ம் தேதி(நேற்று) ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ச்சியாக சட்டப்பேரவைக்கு 3 நாட்கள் விடப்பட்டது. 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து காலையில் நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுவார். தொடர்ந்து, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். மாலை 5 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, வணிக வரிகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பதில் அளித்து பேசுவார்கள். இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவர்.

தொடர்ந்து நாளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறையும், 12ம் தேதி காலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு துறையும் மாலையில் எரிசக்திதுறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும், 13ம் தேதி காலையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள் துறையும், மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை மானியக்கோரிக்கையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிடுவார்கள். தொடர்ந்து ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

The post 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: சட்டம், செய்தி, வணிகவரித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Commerce ,CHENNAI ,Tamil Nadu Legislative Assembly ,Law ,Commercial Tax Department ,Parliament ,Commerce Tax Department ,Dinakaran ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...