×

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்: காலிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். காலிறுதி போட்டியில் நேபாள அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்தியா – நேபாளம் அணிகளுக்கிடையேயான ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே ஜெய்ஷ்வால் அதிரடியை காட்ட தொடங்கினார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்களிலும் ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும் வெளியேறினர். ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 100 ரன்களை எடுத்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

சிவம் துபே 25 ரன்கள் சேர்க்க, ரிங்கு சிங் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய நேபாள அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணி தரப்பில் ஆவேஸ்கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். காலிறுதியில் நேபாளத்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

The post ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்: காலிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆடவர் அணி appeared first on Dinakaran.

Tags : Asian Games T20 Cricket ,Nepal ,Hangzhou ,men ,Dinakaran ,
× RELATED தென்னாப்பிரிக்கா அணி போராடி வெற்றி..!!