×

ஆசிய விளையாட்டு ஹாக்கி இந்தியா – உஸ்பெகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா – உஸ்பெகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஆண்கள் ஹாக்கி போட்டி இன்று தொடங்கும் நிலையில், மகளிர் ஹாக்கி போட்டிகள் நாளை மறுநாள் தொடங்குகின்றன. ஆண்கள் பிரிவில் மொத்தம் 12 அணிகள் களமிறங்குகின்றன. ஏ பிரிவில் இந்தியா பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

மகளிர் ஹாக்கியில் 10 அணிகள் களமிறங்க உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, கொரியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் அணிகளும், பி பிரிவில் ஜப்பான், சீனா, தாய்லாந்து, கஜகிஸ்தான், இந்தோனேசியா அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. லீக் சுற்றின் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஆண்கள் அரையிறுதி ஆட்டங்கள் அக்.4ம் தேதியும். பைனல் அக்.6ம் தேதியும் நடைபெறும். மகளிர் அரையிறுதி ஆட்டங்கள் அக்.5ம் தேதியும், இறுதிப் போட்டி அக்.7ம் தேதியும் நடக்கும்.

சென்னையில் கடந்த மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற உற்சாகத்துடன் இந்திய ஆண்கள் அணி களம் காண்கிறது. உலக தரவரிசையில் 3வது இடத்தில் இருக்கும் இந்தியா, ஆசிய அளவில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. இந்த தொடரில் இந்தியா பதக்கம் வெல்வது உறுதி என்றாலும், அது தங்கமாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில், இந்திய ஆண்கள் அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஆசிய தரவரிசையில் 15வது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானை சந்திக்கிறது.

இந்திய மகளிர் ஹாக்கி அணியும் ஆசிய அளவில் நம்பர் 1 அணியாக உள்ளது. ஸ்பெயின் ஹாக்கி சங்க நூற்றாண்டு விழா தொடரிலும், 4 நாடுகள் ஹாக்கி தொடரிலும் முதல் இடம் பிடித்து அசத்திய சவிதா புனியா தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வென்று அசத்தும் என எதிர்பார்க்கலாம். இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் செப். 27ம் தேதி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது.

The post ஆசிய விளையாட்டு ஹாக்கி இந்தியா – உஸ்பெகிஸ்தான் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Asian Games Hockey ,India ,Uzbekistan ,Hangzhou ,Asian Games ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...