×

அருணாச்சல் விவகாரத்திற்கு மத்தியில் 2 இந்திய நிருபர்கள் மீண்டும் சீனா திரும்ப தடை: இருவரின் விசாவும் முடக்கப்பட்டதால் பரபரப்பு

பீஜிங்: அருணாச்சல் விவகாரத்திற்கு மத்தியில் 2 இந்திய நிருபர்களின் விசாவை சீனா முடிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சீனா திரும்ப தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ‘பிரசார் பாரதி’ நிருபர் அன்ஷுமன் மிஸ்ரா, பிரபல ஆங்கில பத்திரிகையின் நிருபர் அனந்த் கிருஷ்ணன் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் சொந்த வேலையின் காரணமாக இந்தியா வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரின் ‘விசா’ முடக்கப்பட்டதாகவும், அவர்கள் சீனாவுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,

‘அன்ஷூமன் மிஸ்ரா, அனந்த் கிருஷ்ணன் ஆகியோரது இந்திய விசா புதுப்பிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 31ம் தேதி சீன அரசின் செய்தி நிறுவனமான ‘சின்ஹுவா’-வின் டெல்லி நிருபரை, சீனாவுக்கு செல்லுமாறு ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டது. அதனால் அவர் சீனா சென்றார். அதன் எதிரொலியாக தற்போது இந்திய நிருபர்கள் இருவருக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சின்ஹுவா நிறுவன நிருபர் சீனாவுக்கு அனுப்பப்பட்டதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டுகின்றன.

அவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லியில் பணியாற்றியதால், மீண்டும் அவர் சீனா திரும்பினார் என்று கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் இந்திய தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்றைய நிலையில் சீனாவின் பீஜிங்கில், இந்திய ஊடகவியலாளர்கள் கே.ஜே.எம்.வர்மா, சுதிர்தோ பத்ரனோபிஸ் ஆகிய இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அருணாச்சல் விவகாரத்திற்கு மத்தியில், நிருபர்களின் விசா முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அருணாச்சல் விவகாரத்திற்கு மத்தியில் 2 இந்திய நிருபர்கள் மீண்டும் சீனா திரும்ப தடை: இருவரின் விசாவும் முடக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Arunachal ,China ,BEIJING ,
× RELATED அருணாச்சலில் தொடரும் கனமழை:...