×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர்


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளதால் கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் இன்று அதிகாலை நடந்தது. இதையொட்டி பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயில், கச்சபேஸ்வரர் கோயில், வழக்கறுத்தீஸ்வரர் கோயில், சிவகாமி சமேத நடராஜர் கோயில், புண்ணியகோட்டீஸ்வரர் கோயில், காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், தவளேஸ்வரர், உத்திரக் கோடீஸ்வரர், மணிகண்டீஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர், நகரீஸ்வரர் உள்ளிட்ட காஞ்சிபுரத்தில் உள்ள 127 சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இதையொட்டி சிவன் கோயிலில் உள்ள நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆண்டுக்கு ஒருமுறை வரும் ஆருத்ரா தரிசித்தின்போது ஆனந்த நடனம் ஆடும் நடராஜர், கேட்டவரம் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நடராஜ பெருமானை தரிசித்தால் எல்லா பிணிகளும் விலகும் என்றும், எதிர்ப்புகள் தனியும் என்றும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதுபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நடராஜரை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Shiva temples ,Kanchipuram district ,Kanchipuram ,Sami ,
× RELATED வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்...