கூடுவாஞ்சேரி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி இளைஞர்கள், தங்களது படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பு உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து, நேற்று நள்ளிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்டவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுத்தி அமைதியான முறையில் போராடி வருகிறோம். சென்னையில் எங்களை கைது செய்து, நேற்று நள்ளிரவு திக்குதெரியாத காட்டில் இறக்கிவிட்டனர். அங்கு போராடியதும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். எங்களை ஏன் போலீசார் அலைக்கழிக்கின்றனர் என்பது தெரியவில்லை என்றனர். இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று நள்ளிரவு 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய போலீசார், அவர்களை மாநகர பேருந்து மூலம் சென்னை வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
The post கைது செய்து அலைக்கழிப்பு; மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.