×

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் கைது

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை 23 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி பெரம்பூர் சடையப்பதாஸ் தெருவில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திற்கு தபால் மூலமாக கடிதம் வந்தது. அதில், ஆம்ஸ்ட்ராங் மகள் கடத்தி கொலை செய்யப்படுவார் என்றும், அவரது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் குண்டு வீசி கொலை செய்வோம்’ என்றும் எழுதப்பட்டிருந்தது. இதுபற்றி ஆம்ஸ்ட்ராங்கின் உதவியாளர் செல்வம், செம்பியம் போலீசில் புகார் செய்தார்.

புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் விடுத்த கடிதத்தில் படூரை சேர்ந்த சதீஷ் என்பவர் முகவரி இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அந்த கடிதத்தை அவர் எழுதவில்லை என தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, செங்கல்பட்டை சேர்ந்த ரோஸ் நிர்மலா என்பவர், கடலூர் மாவட்டத்தில் 2022ம் ஆண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தார்.

அவரிடம் கடலூரை சேர்ந்த தனியார் நர்சரி பள்ளி தாளாளர் அருண் ராஜ் (33) என்பவர், தனது பள்ளிக்கு அங்கீகாரம் கேட்டு மனு அளித்திருந்தார். அதை விசாரித்து விட்டு அங்கீகாரம் வழங்காமல் ரோஸ் நிர்மலா நிராகரித்துள்ளார். பின்னர் அந்த பதவியில் இருந்து ரோஸ் நிர்மலா ஓய்வுபெற்று விட்டார். அவரை பழிவாங்குவதற்காக அருண்ராஜ் பல திட்டங்களை தீட்டினார். அதன்படி, ரோஸ் நிர்மலா வசிக்கும் செங்கல்பட்டு வீட்டின் முன்பும், அவரது மகள் வசிக்கும் படூர் வீட்டின் முன்பும் பல்வேறு அருவருக்கத்தக்க தகவல்களை போஸ்டர்களாக அச்சடித்து ஒட்டியுள்ளார்.

அவற்றை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ரோஸ் நிர்மலா, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் அருண்ராஜை கைது செய்து சிறையிலடைத்தனர். அதன் பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் படூரில் ரோஸ் நிர்மலாவின் மகள் வைத்திருக்கும் துணிக்கடைக்கு அருகே கடை வைத்திருக்கும் சதீஷ் என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் சாட்சியை கலைக்கவும், மிரட்டவும் சதீஷ் பெயரை பயன்படுத்தி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தது அருண்ராஜ் என தெரியவந்தது.

இதையடுத்து அருண்ராஜை தேடியபோது, கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது லேப்டாப்பை சோதனை செய்வதற்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதில் ரோஸ் நிர்மலா வழக்கில் சதீஷ் சாட்சியாக உள்ளதால் அவரை பழிவாங்க ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அவரது பெயரில் கடிதம் அனுப்பியதும், ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு கோவளம் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக கோவளம் காவல் நிலையத்துக்கும் அருண்ராஜ் மிரட்டில் கடிதம் அனுப்பி இருந்தார்.

அதிலும் சதீஷ் பெயர் குறிப்பிட்டிருந்தது. அது போலியான கடிதம் என போலீசார் விட்டு விட்டனர். சதீஷுக்கு தொல்லை கொடுத்தால் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனது வழக்கிற்கு வர மாட்டார் என நினைத்து அருண்ராஜ் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அருண் ராஜிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Bahujan Samaj Party ,Perampur ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...