×

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன். ஆர்ம்ஸ்ட்ராங் இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயவதிக்கும், தொண்டர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பட்டியலின மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான அரசியலை மேற்கொண்டவர். அவரது மறைவு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பகுஜன் சமாஜ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

* செல்வபெருந்தகை எம்.எல்.ஏ (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்): தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

* திருமாவளவன் எம்.பி (விசிக தலைவர்): பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பவுத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை – எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதேபோல் அன்புமணி (பாமக தலைவர்), ஜவாஹிருல்லா எம்எல்ஏ (மனித நேய மக்கள் கட்சி தலைவர்), பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொதுச்செயலாளர்), ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் படுகொலை அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CHENNAI ,Bahujan Samaj Party ,Tamil Nadu ,president ,Edappadi Palaniswami ,ADMK ,General Secretary ,Dinakaran ,
× RELATED மகனின் வளர்ச்சியை தடுத்து...