×

அரியலூர் அருகே அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை: டெல்டாவில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கொட்டியது

திருச்சி: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக பலத்த மழை பெய்தது. நாகையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மிதமான மழை பெய்தது. தஞ்சையில் நேற்றிரவு 7 மணிக்கு துவங்கி 10 மணி வரை மழை கொட்டியது. பின்னர் நள்ளிரவு 12 மணி வரை விட்டு விட்டு பொழிந்தது. கும்பகோணம், அதிராம்பட்டினம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு பரவலாக மழை பொழிந்தது.

பெரம்பலூர் நகரில் நேற்றிரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை கன மழை கொட்டியது. இதேபோல் செட்டிக்குளம், பாடாலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் மழை பெய்தது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார பகுதிகளில் காற்றுடன் 2 மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது. ஆண்டிமடத்தில் செவ்வாய் கிழமையையொட்டி நேற்றிரவு வாரச்சந்தை கூடியது. வியாபாரிகள் காய்கறிகளை மூட்டை மூட்டையாக இறக்கி வைத்திருந்தனர். திடீர் மழையால் வியாபாரம் பாதித்தது.

வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர். குன்னத்தில் மாலை 5 மணியிலிருந்து மழை பொழிந்தது. 6 மணியளவில் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரில் சுமார் அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆலங்கட்டிகளை கையில் பிடித்து விளையாடி மகிழ்ந்தனர். கரூர் மாவட்டத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பலத்த மழை பெய்தது. திருச்சியில் நேற்றிரவு 7.30 மணிக்கு காற்றுடன் லேசான மழை பொழிந்தது. இந்த மழை இரவு 10.30 மணி வரை தொடர்ந்தது.

The post அரியலூர் அருகே அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை: டெல்டாவில் பல இடங்களில் பலத்த காற்றுடன் கொட்டியது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Delta ,Trichy ,Tamil Nadu ,Delta districts ,Nagai ,Thanjavur… ,Dinakaran ,
× RELATED மோட்டார், மின் வயர்கள் மாயம் அரியலூர் மயானம் சீரமைக்கப்படுமா?