×

மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கலை பண்பாட்டுத்துறையின் வாயிலாக தமிழகத்தின் 37 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்டக் கலை மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அக்கலை மன்றத்தின் வாயிலாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்டக் கலை மன்ற விருதுகள், கலை இளமணி (18 வயதிற்கு உட்பட்டோர் – விருது தொகை ரூ.4,000/-), கலை வளர்மணி (19 வயது முதல் 35 வரை – விருதுத் தொகை ரூ.6,000/-), கலைச் சுடர்மணி (36 வயது முதல் 50 வரை-விருதுத் தொகை ரூ.10,000/-), கலை நன்மணி (51 வயது முதல் 65 வரை-ரூ.15,000/-), கலை முதுமணி (66 மற்றும் அதற்கு மேற்பட்டோர்-விருதுத் தொகை ரூ.20,000/-) என ஐந்து விருதுகள், ஒவ்வொரு விருது வகையிலும் மூன்று விருதுகள் என மாவட்டம் ஒன்றுக்கு 15 விருதுகள் என்ற அடிப்படையில் ஆண்டொன்றுக்கு 555 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் 2022-2023 மற்றும் 2023-2024 ஆம் ஆண்டிற்கு மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கலை பண்பாட்டுத்துறையால் வரவேற்கப்படுகின்றன. கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இணைய வழியில் மாவட்டக் கலை மன்ற விருதிற்கு விண்ணப்பித்திட ஏதுவாக விண்ணப்பங்கள் (Online Application) கலைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விருதிற்கு விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தங்களது புகைப்படத்துடன் (Passport Size Photo) கூடிய தன்விவரக் குறிப்புடன் (பெயர், பிறந்த தேதி, ஆதார் அடையாள அட்டை, கலைப்பிரிவுகளில் பெற்றுள்ள கல்வித் தகுதிகள், அனுபவம், இதுவரை பெற்ற விருதுகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களுடன்) கூடிய விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் அமைக்கப்படும் தெரிவுக்குழுவின் வாயிலாக தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்படுவர். மேற்காணும் விவரங்களின் அடிப்படையில் உரிய விவரங்களுடன் கூடிய விண்ணப்பங்களை 15.07.2023-க்குள் அனுப்பி வைத்திட செவ்வியல் கலை, கிராமியக் கலை மற்றும் கவின் கலை கலைஞர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post மாவட்டக் கலை மன்ற விருதுகளுக்கான விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : District Art forum ,Chennai ,District Arts forum ,Tamil Nadu ,Department of Art Culture ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...